புதிய விரிவான மினி பேருந்து திட்டம் மூலம் பேருந்து வசதி கிடைக்காத 90 ஆயிரம் கிராமங்களில் வசிக்கும் 1 கோடி மக்கள் பயனடைந்துள்ளதாக தமிழக அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பேருந்து வசதி கிடைக்காத குக்கிராமப் பகுதி மக்களுக்கும் பேருந்து வசதி கிடைக்கும் வகையில் 1997-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதியால் மினி பேருந்து திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விரிவான மினி பேருந்து திட்டத்தின்படி, 25 கிமீ தூரத்துக்கு மினி பேருந்து இயக்கப்படும் என்றும், முக்கிய அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் போன்ற இடங்களுக்குச் சென்று பொதுமக்களை இறக்கிவிட ஏதுவாக மேலும் 1 கிமீ தூரம் வரை மினி பேருந்துகளை இயக்க வழிவகை செய்யப்பட்டது.
இதன்படி, 3,103 வழித்தடங்களில் உள்ள 90 ஆயிரம் கிராமப்புறங்களில் வசிக்கும் ஏறத்தாழ 1 கோடி மக்கள் பயன்பெறத்தக்க வகையில் திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 16-ம் தேதி தஞ்சாவூரில் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
இதுவரை, பேருந்துகளை தங்கள் கிராமத்தில் காணாத பொதுமக்கள் கண்டு மகிழ்ந்து பரவசம் அடையும் வகையில் மினி பேருந்துகள் கிராமப்புறங்களில் பயணிக்கத் தொடங்கிவிட்டன. இந்த மினி பேருந்தை மூதாட்டி ஒருவர் தரையில் விழுந்து தலைவணங்கி வரவேற்றார். வேறு சிலர் பேருந்து வந்த வழித்தடத்தில் கற்பூரம் ஏற்றி மகிழ்ந்து வரவேற்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இவர்களைப் போல ஏறத்தாழ 1 கோடி பேர் மினி பேருந்துகளில் பயணம் செய்து அளவில்லாத மகிழ்ச்சி அடைகின்றனர். இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.