சூர்யா பிறந்த நாளன்று ‘கருப்பு’ படத்தின் டீசர் வெளியாவது உறுதியாகி இருக்கிறது.
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கருப்பு’. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தினை தயாரித்து வருகிறது. ஜூன் 20-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜி பிறந்த நாளை முன்னிட்டு இதன் தலைப்பை அறிவித்தது படக்குழு. ஆனால், டீசர் வெளியாகும் என்று எதிர்பார்த்திருந்த சூர்யாவின் ரசிகர்களுக்கு இது ஏமாற்றத்தை அளித்தது.
இதையடுத்து, ‘கருப்பு’ டீசர் எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி பதிலளித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனது பிறந்த நாளுக்கும், ‘கருப்பு’ படத்துக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி. அடுத்த மாதம் வரவுள்ள பெரிய நாளுக்காக பெரிய விருந்து காத்திருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஜூலை 23-ம் தேதி அன்று சூர்யாவின் 50-வது பிறந்த நாளாகும். அன்றைய தினம் தான் டீசர் வெளியாக இருக்கிறது என்பதை மறைமுகமாக உறுதிப்படுத்தி இருக்கிறார் ஆர்.ஜே.பாலாஜி. இது சூர்யா ரசிகர்களை பெரும் உற்சாகமாக்கி இருக்கிறது.
‘கருப்பு’ படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், நட்டி, அனகா மாயா ரவி, ஸ்வாசிகா உள்ளிட்ட பலர் சூர்யாவுடன் நடித்துள்ளார். ஒளிப்பதிவாளராக ஜி.கே. விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.