சென்னை: சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு திடீரென பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சென்னையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ந்து கடும் வெப்பம் நிலவி வந்தது. லேசான மழையால் சிறிது வெப்பம் தணிந்தாலும் கூட அடுத்த நாளே மீண்டும் வெயில் சுட்டெரிப்பதால் மக்கள் கடும் சிரமம் அடைந்தனர்.
தமிழகத்தில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவுக்கு அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை மையம் கூறியிருந்தது.
இந்த சூழலில் நேற்று (ஜூன் 20) இரவு சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்தது. கிண்டி, சைதாப்பேட்டை, மைலாப்பூர், மந்தைவெளி உள்ளிட்ட பகுதிகளிலும், புறநகர்ப் பகுதிகளான பூந்தமல்லி, நசரத்பேட்டை, செம்பரம்பாக்கம், மாங்காடு, போரூர், ஐயப்பந்தாங்கல் பகுதிகளிலும், தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை, அனகாபுத்தூர், பம்மல், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை வெளுத்து வாங்கியது.
இரவு 8 மணி அளவில் தொடங்கிய மழை நள்ளிரவு வரை நீடித்தது. இதனால் பல இடங்களில் சில மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இரவு வேலை முடிந்து வீட்டுக்குச் செல்வோர் பெரும் இன்னலுக்கு ஆளாகினர். கடந்த சில தினங்களாக வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் நேற்று பெய்த திடீர் மழையால் சென்னையில் வெப்பம் தணிந்துள்ளது.
முன்னதாக, சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிவிப்பில், “தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்றில் வேக மாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று முதல் 26-ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயர வாய்ப்பு உள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது.