மதுரை: “முருக பக்தர்கள் மாநாடு தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும், நல்லவர்கள் மக்கள் பணியாற்றும் நிலையை ஏற்படுத்தும்.” என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
மதுரை மாவட்டம் வண்டியூர் டோல்கேட் அருகே நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்களில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் இன்று தரிசனம் செய்தார். அப்போது முன்னாள் எம்.பி உடையப்பன், முன்னாள் எம்எல்ஏ கேஎஸ்கே.ராஜேந்திரன், மாவட்டத் தலைவர்கள் ராஜாங்கம், பாலசுப்பிரமணியன், மாநில தொண்டரணி அமைப்பாளர் அயோத்தி ஆகியோர் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜி.கே.வாசன், “முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலே இரண்டு படை வீடுகள் மதுரையில் இருக்கிறது. அத்தகைய புகழ்பெற்ற புண்ணிய பூமியான மதுரையில் முருக பக்தர்கள் மாநாட்டில், அறுபடை வீடுகளின் மாதிரி கோயில்கள் அமைத்தும், அதிலே சுவாமி தரிசனம் செய்வதும் சிறப்புக்குரியது. இதனை பக்தர்களுக்காக ஏற்பாடு செய்திருக்கின்றனர். இதில் அரசியல் கிடையாது.
இருப்பினும், ஆன்மிகம் என்பது மனிதனின் வாழ்வியல் முறைகளை ஒழுக்கப் படுத்துவதற்கும், முறைப்படுத்துவதற்கும் அடித்தளம் என்பதை இம்மாநாட்டில் பெருமையாக கூறுகிறேன். தமிழ் கடவுள் முருகன். தமிழ்ப் பற்று உள்ளவர்கள் தமிழ் கடவுள் முருகனுக்கு வணக்கம் செலுத்த வேண்டும்.

அதனடிப்படையில் முருகனுக்கு வணக்கம் செலுத்தவும் தரிசிக்கவும் வந்திருக்கிறேன். ஆன்மிகத்தின் அடிப்டையில் செயல்படும் அனைவரும் முருகனை தரிசிக்க வேண்டும். ஜாதி, மதம், மொழிகள், இனத்திற்கு அப்பாற்பட்டது ஆன்மிகம். இந்த மாநாடு தமிழகத்தில் நிச்சயமாக மாற்றத்தை ஏற்படுத்தும்.
நல்லவர்கள் மக்கள் பணியாற்றும் நிலையை ஏற்படுத்தும். தமிழ்ப்பற்று உள்ளவர்கள் வந்திருந்து தரிசிப்பது மகிழ்வைத் தருகிறது. இதுபோன்ற மாநாடுகளுக்கு அரசியல், ஜாதி, மதம் கிடையாது. இது முருக பக்தர்கள் மாநாடாகவே இருக்கட்டும், மசூதியில் எடு்க்கும் விழா, சர்ச்சில் நடைபெறும் விழாவாக இருந்தாலும் ஆன்மிக எண்ணம் உடையவர்கள் நாட்டின் நலனுக்காகவும், ஒற்றுமைக்காகவும் செயல்படுவர்.
எத்தகைய இடையூறுகளை இம்மாநாட்டுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தாலும் அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறியும் சக்தி ஆன்மிகத்திற்கு உண்டு.” என்று ஜி.கே.வாசன் கூறினார்.