மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள அறுபடை வீடுகள் மாதிரி கோயில்களில் மதுரை ஆதீனம், புதுச்சேரி அமைச்சர், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா உள்ளிட்டோர் நேற்று தரிசனம் செய்தனர்.
பின்னர், ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் கூறியதாவது: அறுபடை வீடுகள் கண்காட்சியை பார்வையிட நாளுக்கு நாள் மக்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்து விரோத தீயசக்திகள் குரைக்கின்றன. இந்துசமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு முருக பக்தர்கள் மாநாட்டுக்கு மக்களை போகச் சொல்லியிருக்க வேண்டும். தமிழக அரசு நடத்திய முருகன் மாநாட்டில் கலந்துகொண்ட உதயநிதி ஸ்டாலின், இந்த மாநாட்டை ஆன்மிக மாநாடு இல்லை எனக் கூறியுள்ளார்.
தமிழக அரசு நடத்திய மாநாடு திமுக மாநாடு, நாங்கள் நடத்துவதுதான் முருக பக்தர்கள் மாநாடு. திமுக மொழியின் ரீதியாக மக்களை பிரிக்க நினைக்கிறது, தமிழர்கள் என்றாலே இந்துக்கள்தான். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு வரும் பவன் கல்யாணை எதிர்க்க சேகர் பாபு யார்? திமுகவினர் முருகனின் துரோகிகள், எதிரிகள்.
திமுக இந்து கோயில்களை மையப்படுத்தி கொள்ளையடித்து வருகிறது. திமுகவினர் போலியாக நெற்றியில் திருநீரை பூசி வருகிறார்கள். இந்துக்கள் அடுத்த 9 மாதங்கள் பொறுத்துக்கொள்ள வேண்டும், 2026-க்குப் பின்னர் திமுக அழிந்து போய்விடும். முருகன் கோயிலில் வைத்த திருநீரை அழிக்கும் திருமாவளவன் இந்து விரோதி. இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக பாஜக பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், திருநகரில் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் வாழ்ந்த இடத்திலிருந்து வேல் பூஜை செய்து, திருப்பரங்குன்றம் பகுதி வழியாக நேற்று பாதயாத்திரை சென்றார். பின்னர், அந்த வேலை முருக மாநாட்டு திடலுக்கு கொண்டுவந்தார். தொடர்ந்து, அந்த வேல் மாதிரி திருப்பரங்குன்றம் கோயிலில் வைக்கப்பட்டது.
இதில் பாஜக மதுரை மேற்கு மாவட்டத் தலைவர் சிவலிங்கம், திருப்பரங்குன்றம் மண்டலத் தலைவர் வேல்முருகன், தேவர் பேரவை கூட்டமைப்பினர் கலந்துகொண்டனர். மதுரை ஆதீனம், புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் சாய் சரவணக்குமார் மாதிரி அறுபடை வீடுகளில் தரிசனம் செய்தனர்.
ஆளுநர் மதுரை வருகை:
மாநாட்டு திடலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முருகனின் மாதிரி அறுபடை வீடுகளை தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி இன்று வழிபடுகிறார். இதற்காக அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று இரவு 7.25 மணிக்கு மதுரை வந்தார். விமான நிலையத்தில் அவரை ஆட்சியர் சங்கீதா, ஐ.ஜி. லோகநாதன், எஸ்பி அரவிந்த் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.
இதைத் தொடர்ந்து காரில் புறப்பட்டுச் சென்ற அவர், வேலம்மாள் மருத்துவமனை அருகிலுள்ள தனியார் ஓட்டலுக்கு 8.35 மணிக்கு சென்று தங்கினார். யோகா தினத்தையொட்டி வேலம்மாள் அறக்கட்டளை சார்பில் இன்று காலை நடக்கும் யோகா பயிற்சி நிகழ்வில் பங்கேற்கிறார். இதன் பின்னர், காலை 10 மணிக்கு முருக பக்தர்கள் மாநாட்டு திடலிலுள்ள மாதிரி அறுபடை வீடுகளை வழிபடுகிறார். பின்னர் 11 மணிக்கு மேல் விமானம் சென்னைக்கு புறப்பட்டுச் செல்கிறார்.