அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் படம், ‘லவ் மேரேஜ்’. சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ், முருகானந்தம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் சத்யராஜ் நடித்திருக்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
அஸ்யூர் பிலிம்ஸ், ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனங்கள் சார்பில் ஸ்வேதா, நிதி சாகர் இணைந்து தயாரித்துள்ளனர். இந்தப் படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் பேசும்போது, “நம் நண்பர்கள், உறவினர்கள் யாராவது காதலித்திருப்பார்கள் அல்லது காதலித்துக் கொண்டிருப்பார்கள். காதல் என்பது திருமணம் வரை செல்லக்கூடியது தான். இதனால் இந்தப் படத்துக்கு, டைட்டிலே மிகப்பெரிய வெற்றியைத் தரும். விக்ரம் பிரபு கடினமாக உழைக்கக் கூடிய நடிகர்.
பக்கத்து வீட்டுப் பையனாக இந்தப் படத்தில் அவர் நடித்திருக்கிறார். இதற்காகவே மிகப்பெரிய வெற்றியை பெறும். பரிசோதனை முயற்சியாக அவர் நிறைய படங்களில் நடித்து வருகிறார். அவர் வில்லனாகவும் நடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார். படக்குழுவினர் கலந்து கொண்டனர். இந்தப்படத்தை தமிழகம் முழுவதும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் வழங்குகிறார்.