மதுரை: பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்குப் பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்தது தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீது வழக்குப் பதிய லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.
தமிழகத்தில் 8,790 கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களுக்கு 5 விதமான பதிவேடுகள் கொள்முதல் செய்ததில், கடந்த 2019-ல் ரூ.1.75 கோடி முறைகேடு நடந்திருப்பதாக தணிக்கை குழு அரசுக்கு அறிக்கை அளித்தது. இதுகுறித்து விசாரித்த லஞ்ச ஒழிப்பு போலீஸார், ஒப்பந்தம் எடுத்த தூத்துக்குடி கூட்டுறவு ஸ்டோர் மேலாளர் வெள்ளையம்மாள், அவரது கணவர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தது.
பால்வளத் துறையின் அப்போதைய அதிகாரிகளான இயக்குநர் சி.காமராஜ், ஆணையர் வள்ளலார், கூடுதல் பால் ஆணையர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்த குற்றச்சாட்டில் இருந்து காமராஜ், வள்ளலார் விடுவிக்கப்பட்டனர்.
கிறிஸ்துதாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதோடு ஓய்வு பெறவும் அனுமதி மறுக்கப்பட்டது. தனது பணியிடை நீக்கத்தை ரத்து செய்தும், ஓய்வுபெற அனுமதி வழங்கக்கோரியும் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் கிறிஸ்துதாஸ் மனுத் தாக்கல் செய்தார்.
இதை விசாரித்து நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: தமிழகத்தில் 8,790 பால் கூட்டுறவுச் சங்கங்களுக்கு தலா ரூ.2,282.10-க்கு 5 பதிவேடுகள் வாங்க தூத்துக்குடி கூட்டுறவு ஸ்டோர் மேலாளர் வெள்ளையம்மாள் அவர் கணவர் பெயரில் ஒப்பந்தம் எடுத்துள்ளார். இந்த ஒப்பந்தத்தில் 5 பதிவேடுகளுக்குப் பதிலாக ரூ.2,688-க்கு 3 பதிவேடுகளை மட்டுமே வழங்கியுள்ளார். இந்தக் கொள்முதலால் அரசுக்கு ரூ.1.75 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாக தணிக்கையில் தெரிய வந்துள்ளது.
லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரித்தபோது பதிவேடு கொள்முதல் செய்த நிறுவனம் போலியானது என தெரியவந்தது. விசாரணையில் கணவன், மனைவி இருவரும் சட்டவிரோதமாக ரூ.39.45 லட்சம் பெற்றது தெரியவந்தது. இவர்கள் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். காமராஜ், வள்ளலார், கிறிஸ்துதாஸ் மீது நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரைக்கப்பட்டது.
அதன்படி, காமராஜ், வள்ளலார் மீது பொதுத்துறை தனி நடவடிக்கை எடுத்தது. பின்னர் அந்த நடவடிக்கை அப்போதைய தலைமைச் செயலரால் முடித்து வைக்கப்பட்டது. மனுதாரர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இருவர் மீதான குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதற்கு கீழ்நிலை அதிகாரிகளின் பரிந்துரைகளில் இயந்திரத்தனமாகக் கையெழுத்திட்டதாக கூறப்பட்டுள்ளது. அப்படிச் செய்திருந்தால் இருவரும் ஐஏஎஸ் அதிகாரிகளாக இருக்கத் தகுதியற்றவர்கள். கூட்டுறவுச் சங்கங்களுக்குப் பதிவேடுகள் தேவையே இல்லாதபோது பதிவேடுகளை வாங்க முடிவு செய்துள்ளனர்.
ஊழல் செய்த அமைச்சர்கள் மீது வருவாய்க்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதியப்படுகிறது. அதே நேரத்தில் அந்த அமைச்சர்களின் துறைகளுக்குத் தலைமை வகித்த, தவறு செய்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒரு துறைக்குத் தலைமை வகிப்பவருக்குத் தெரியாமல் அந்தத் துறையில் ஊழல் நடைபெறாது.
நாட்டில் 2018 முதல் 2023 ஜூன் 30 வரை 135 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். இதில் எந்த ஐஏஎஸ் அதிகாரியும் தண்டிக்கப்படவில்லை. தற்போது ஊழல் என்பது சாதாரணமாகிவிட்டது. பணம் படைத்தோர், அதிகாரம் மிக்கவர்கள் குற்றத்திலிருந்து விடுபடுவதன் மூலம் எதையும் சாதிக்க முடியும் என நினைக்கின்றனர்.
சாதாரண அரசு ஊழியர்கள் மீது மட்டும் வழக்குகள் பதிவு செய்யும் லஞ்ச ஒழிப்புத்துறை, பெயரளவில் மட்டுமே செயல்படுகிறது. அத்துறைக்குப் போதிய ஊழியர்கள் இல்லை.
மாநில அரசின் தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்பு ஆணையர் ஆகியோர் தவறு செய்யும் ஐஏஎஸ் அதிகாரிகளை விசாரிப்பதில் தைரியம், உறுதியைக் கொண்டிருக்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரிகள் அதிகாரம் மிக்கவர்கள். தவறு செய்த ஐஏஎஸ் அதிகாரிகளை சக ஐஏஎஸ் அதிகாரிகள் காப்பாற்றுகின்றனர்.
பதிவேடுகள் கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்துள்ளதால் மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும்.
ஐஏஎஸ் அதிகாரிகள் காமராஜ், வள்ளலார் மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். முறைகேடு குற்றச்சாட்டிலிருந்து ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டது தொடர்பாக மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் விசாரிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.