சென்னை: குவாரி உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக பணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரிய வழக்கில், புவியியல் மற்றும் சுரங்கத் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழ்நாடு குவாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கே.ஆர் குகேஷ் தாக்கல் செய்துள்ள மனுவில், “குவாரிகளை நடத்துவதற்கு சுரங்க துறை, சுற்றுச்சூழல், தொழில் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் அனுமதிகளை பெற்று பல்வேறு இன்னல்களை சந்தித்து குவாரிகளை குவாரி உரிமையாளர்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசின் புவியியல் சுரங்கத்துறை அதிகாரிகளும், புதுக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்ற தனிநபரும் குவாரி உரிமையாளர்களிடம் இருந்து சட்டவிரோதமாக கட்டாய வசூல் செய்து வருகின்றனர்.
குறிப்பாக பட்டா நிலங்களில் மண் மற்றும் கல் வெட்டி எடுப்பதற்கு புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுக்கு 40 சதவீதம் கமிஷன் தொகையும், அரசு புறம்போக்கு நிலத்தில் கல், மண் எடுக்க ராமச்சந்திரன் என்ற தனி நபருக்கு 70% கமிஷனும் கொடுக்க வேண்டும் என குவாரி உரிமையாளர்களிடம் இருந்து கட்டாய வசூல் செய்யப்படுகிறது.இது தொடர்பாக முறையிட்ட போது, அரசு அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் பணம் கொடுப்பதற்காகவே குவாரி உரிமையாளர்களிடம் பணம் வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
பின்னர் இது குறித்து புவியியல் சுரங்கத்துறை இயக்குநருக்கு கடந்த பிப்ரவரி மாதம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை,” என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில், “குவாரி உரிமையாளர்களிடம் இருந்து பணம் வசூலிக்க எந்தவொரு தனிப்பட்ட நபருக்கோ, தனியார் அமைப்புக்கோ அதிகாரம் வழங்கப்படாத நிலையில் குவாரி உரிமையாளர்களிடம் கட்டாய வசூலில் ஈடுப்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக புவியியல் மற்றும் சுரங்க துறை இயக்குநர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜூன் 25-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.