திருவள்ளூர்: “2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும், அதற்கு முருகன் நிச்சயம் துணைபுரிவார்,” என பாஜக முன்னாள் மாநில தலைவரும், தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளூர் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் உள்ள திருவள்ளூர் மேற்கு மாவட்ட பாஜக தலைமை அலுவலகத்தில், இன்று (ஜூன் 20) தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. நேற்று முன்தினம் சூரியனார் கோயிலில் முதல்வர் திறந்து வைத்த கட்டிடம், பிறகு இடிந்து விழுந்தது. பக்தர்கள் யாத்திரை செல்வார்கள். ஆனால் மருத்துவர்கள் யாத்திரை செல்கின்றனர்.
அதற்கு காரணம் திமுக அரசு வாக்குறுதியை நிறைவேற்றாததுதான். வேலூர் மருத்துவமனையில் 35 மருத்துவர்கள் இருக்க வேண்டிய இடத்தில் 8 மருத்துவர்கள் தான் இருக்கிறார்கள். இதனால் மகப்பேறு மருத்துவம் சாமானிய மக்களுக்கு கிடைக்காமல் உள்ளது. தமிழகத்தில் இந்த ஆண்டு புதிதாக ஆரம்பிக்கப்பட்ட 35 அரசுக் கல்லூரியில் ஒரு பேராசிரியர் நியமனம் கூட இல்லை.
மருத்துவக் கல்லூரியில் காலி பணியிடங்கள் உள்ளன. ஆசிரியர்கள் காலி பணியிடங்கள் உள்ளன. அங்கன்வாடி மையங்களிலும் காலி பணியிடங்கள் உள்ளன. இப்படி எல்லாவற்றிலும் தோல்வி அடைந்த அரசாக தமிழக அரசு உள்ளது. முருக பக்தர்கள் மாநாடு அறிவிக்கப்பட்டதிலிருந்து முதல்வர், அமைச்சர் சேகர்பாபு மற்றும் திமுக கூட்டணி கட்சிகள் பதற்றம் அடைந்து வருகின்றனர்.
வேங்கைவயலில் மனிதக்கழிவு கலந்த குடிநீரை மக்கள் அருந்தினார்கள். இதற்கு விசிக தலைவர் தொல்.திருமாவளவன் மனித சங்கிலி போராட்டம் நடத்தவில்லை. ஆனால், அவர் முருக பக்தர்கள் மாநாட்டுக்கு எதிராக மனித சங்கிலி போராட்டம் நடத்துகிறார். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக-பாஜக கூட்டணி வெற்றி பெறும். அதற்கு முருகன் எங்களுக்கு நிச்சயம் துணை புரிவார்,” என்று அவர் கூறினார்.