சென்னை: சமூகநீதிக்கான போர்க் களத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும் என விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
பாமக உட்கட்சி பிரச்சினை குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, பாமக நிறுவனர் ராமதாஸை கலங்க விடக்கூடாது, அவர் பேச்சைக் கேட்டு பாமக தலைவர் அன்புமணி நடந்து கொள்ள வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஊடக நேர்காணலில் பாமக நிறுவனர் ராமதாஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு அவர், “விசிக தலைவர் திருமாவளவன் மீது எனக்கு தனிப்பட்ட பாசம் உண்டு” என்பன உள்ளிட்ட கருத்துக்களை நெகிழ்ச்சியுடன் கூறியிருந்தார்.
இந்த நேர்காணலை சுட்டிக்காட்டி விசிக பொதுச்செயலாளர் துரை.ரவிக்குமார் சமூக வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: விசிக தலைவர் திருமாவளவன் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மனம் நெகிழ்ந்து கூறிய வார்த்தைகளுக்கு நன்றி.
தமிழகத்தில் எப்படியாவது நுழைந்துவிட வேண்டுமென சனாதன சக்திகள் பல்வேறு சதித் திட்டங்களைத் தீட்டிக்கொண்டுள்ளன. சமூக நீதியைக் காப்பதற்கான தேவை 1989-ஐ விட இப்போது இரு மடங்காக உள்ளது. சமூகநீதிக்கான போர்க் களத்தில் ராமதாஸ் மீண்டும் நுழைய வேண்டும். அவரை நம்பி வந்த மக்களை சனாதனம் காவுகொள்ளாமல் காப்பாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.