சென்னை: காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து நடைபயணம் மேற்கொண்ட 7 அரசு மருத்துவர்களை சென்னையில் போலீஸார் கைது செய்தனர்.
தமிழக அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு காலமுறை ஊதிய உயர்வு, பதவி உயர்வு மற்றும் கரோனாவில் உயிரிழந்த மருத்துவர் விவேகானந்தனின் குடும்பத்துக்கு அரசு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டூரில் இருந்து சென்னைக்கு நடைபயண போராட்டத்தை தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் சட்ட போராட்ட குழுவினர் அறிவித்தனர்.
மறைந்த மருத்துவர் நரசிம்மனின் நினைவிடமான சேலம் மாவட்டம் மேட்டூரில் இருந்து கடந்த 11-ம் தேதி நடைபயணத்தை தொடங்கினர். தங்களது கோரிக்கைகள் குறித்து பொதுமக்களிடம் தெரிவிக்கும் வகையில் வழிநெடுகிலும் பதாகைகளை ஏந்தியபடி நடைபயணம் மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், 9-வது நாளான நேற்று அவர்கள் சென்னை வந்தடைந்தனர். அறிவித்தபடி, சென்னை மெரினாவில் உள்ள முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி செல்ல முயன்ற அவர்களை தேனாம்பேட்டையில் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்து, சமூகநல கூடத்துக்கு கொண்டு சென்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அரசு மருத்துவர்களின் சட்ட போராட்ட குழு தலைவர் பெருமாள் பிள்ளை கூறியபோது, ‘‘முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட அரசாணை 354-ஐ அமல்படுத்த கோரி அதிமுக ஆட்சியில் இருந்து போராடுகிறோம்.
அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின், ‘திமுக ஆட்சிக்கு வந்ததும் நிறைவேற்றப்படும்’ என்றார். 4 ஆண்டுகள் ஆகியும் நிறைவேற்றவில்லை. கரோனா பேரிடர் சூழல் போன்ற நெருக்கடியான நேரங்களில் பணியாற்றி, பல உயிர்களை காக்கும் அரசு மருத்துவர்களின் நியாயமான கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும்’’ என்றார்.