மதுரை: புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்றும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக புதுச்சேரி ஆளுநர் கைலாஷ்நாதன் கூறினார். மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மாதிரி அறுபடை வீடுகள் கோயில்களில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் நேற்று வழிபட்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்க் கடவுளான முருகனை தமிழர்கள் அதிகம் வழிபடுகின்றனர். எனது குலதெய்வம் முருகன்தான். வெளிநாடுகளுக்கு சென்றவர்கள்கூட முருகனை வழிபட்டு வருகின்றனர். சிறப்பாக நடைபெற உள்ள முருக பக்தர்கள் மாநாட்டில் பங்கேற்பது மகிழ்ச்சியாக உள்ளது.
புதுச்சேரி ஆளுநராக பதவி ஏற்றதும் நான் சென்ற முதல் இடம் முருகன் கோயில்தான். அந்தக் கோயிலை கட்டியவர் இஸ்லாமியர். வெவ்வேறு தெய்வங்களை வழிபட்டாலும், நாம் அனைவரும் பண்பாட்டுரீதியில் சகோதரத்துடன் வாழ்ந்து வருகிறோம். புதுச்சேரியில் மிகவும் பழமை வாய்ந்த கோயில்கள், சித்தர்களின் சமாதிகள் உள்ளன. புதுச்சேரியை ஆன்மிகத் தலமாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.