மதுரை: இரண்டு உடைந்து போன கேரம் போர்டுகளை வைத்துக்கொண்டு மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது என உயர் நீதிமன்ற நீதிபதிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த முத்துசாமி உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், “சிவகாசி அருகே விஸ்வநாதம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியுள்ளார். மனமகிழ் மன்றம் அமையவுள்ள இடம் பொது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் பகுதியாகும். வழிபாட்டு தலங்கள், பள்ளிகள், மருத்துவமனை மற்றும் வணிக வளாகங்கள் நிறைந்த பகுதி. பள்ளி மற்றும் வழிபாட்டு தலங்களில் இருந்து 100 மீட்டருக்கு அப்பால் தான் மதுக்கடைகள் இருக்க வேண்டும்.
இந்த தூரக்கட்டுப்பாடு விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே, விஸ்வநாதம் கிராமத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க வழங்கிய அனுமதியை ரத்து செய்தும், அந்த இடத்தில் எதிர்காலத்தில் மனமகிழ் மன்றம் அமைக்க அனுமதி கொடுக்கக்கூடாது என உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதிகள், “மனமகிழ் மன்றங்கள் அமைக்க எதன் அடிப்படையில் அனுமதி கொடுக்கப்படுகிறது? இரண்டு உடைந்துபோன கேரம் போர்டுகளை வைத்துக்கொண்டு மனமகிழ் மன்றம் என்ற பெயரில் மதுபான விற்பனை நடைபெறுகிறது. மனமகிழ் மன்றம் எந்த விதியில் அடிப்படையில் பதிவு செய்யப்படுகிறது?
பதிவு செய்யப்பட்ட மனமகிழ் மன்றங்களின் சட்ட திட்டங்கள் என்ன? அந்த மனமகிழ் மன்றங்களில் எத்தனை உறுப்பினர்கள் உள்ளனர்? அந்த உறுப்பினர்களுக்கு ஏற்ப மதுபானங்கள் விநியோகிக்கப்படுகிறதா? மனமகிழ் மன்றங்களை கலால் துறை அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா?. இதற்கு விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கலால் அதிகாரிகள், டாஸ்மாக் மேலாளர் ஆகியோர் பதிலளிக்க வேண்டும். விசாரணை ஒரு வாரத்துக்கு ஒத்திவைக்கப்படுகிறது” என உத்தரவிட்டனர்.