சென்னை: பிரபல உணவகத்தின் மீதான வரி ஏய்ப்பு குற்றச்சாட்டை தொடர்ந்து, சென்னையில் உணவகம் தொடர்புடைய 6 இடங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ‘சீ ஷெல்’ என்ற உணவகம் கேரளா, தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இயங்கி வருகிறது. தமிழகத்தில், சென்னையில், அண்ணநகர், வேளச்சேரி, பெருங்குடி, ஆயிரம்விளக்கு உள்பட 5-க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த உணவகம் செயல்படுகிறது. இந்த உணவகத்தை கேரள மாநிலம், தலச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் குல்ஹி மூசா என்பவர் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், சீ ஷெல் உணவகம், வருமானத்தை குறைத்து காட்டி வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கேரள மாநிலம், கொச்சி வருமானவரித் துறை அதிகாரிகள், சீ ஷெல் நிறுவனம் கடந்த 5 ஆண்டுகளில் தாக்கல் செய்துள்ள வருமான வரி கணக்குகள், பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்தனர்.
இதில், முறைகேடு நடந்திருப்பதற்கான முகாந்திரம் இருந்ததையடுத்து, கொச்சியில் இருந்து தமிழகம் வந்த வருமானவரித் துறை அதிகாரிகள், சென்னை வருமானவரித் துறை அதிகாரிகளுடன் இணைந்து, சீ ஷெல் உணவகங்களில் நேற்று சோதனையில் ஈடுபட்டனர்.
பெருங்குடி, நேரு நகரில் அமைந்துள்ள உணவகம், தொழிலதிபர் குல்ஹி மூசா வீடு, வேளச்சேரி – தாம்பரம் பிரதான சாலையில் அமைந்துள்ள உணவகம், வேளச்சேரி, விஜயநகர் 3-வது குறுக்குத் தெருவில் அமைந்துள்ள உணவகம், ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சீ ஷெல் உணவகத்தின் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், தேனாம்பேட்டையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமான வீட்டிலும் சோதனை நடைபெற்றது. அந்த வீட்டில், சீ ஷெல் உணவகத்தின் ஒரு கிளையை கவனித்து வரும் நடிகர் ஆர்யாவின் உறவினர் வசித்து வருவதாகவும், அதனால், அந்த வீட்டில் சோதனை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.
இந்த சோதனையில், பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து, வரி ஏய்ப்பு நடந்திருப்பதற்கான ஆதாரங்கள் குறித்து வருமானவரி துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சோதனை முழுமையாக முடிவடைந்த பிறகே அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த உணவகத்தின் ஒரு கிளையை நடிகர் ஆர்யா நடத்தி வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அதனை வேறொரு நபருக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது. இந்நிலையில், வருமானவரி சோதனை நடந்த சீ ஷெல் உணவகம் நடிகர் ஆர்யாவுக்கு சொந்தமானது என நேற்று செய்திகள் வெளியாகின. இதற்கு மறுப்பு தெரிவித்த நடிகர் ஆர்யா, ‘ சீ ஷெல்’ உணவகத்துக்கும், தனக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், உணவகத்தின் உரிமையாளர் வேறு ஒருவர், என்று விளக்கம் அளித்துள்ளார்.