புதுச்சேரி: புதிய கல்விக் கொள்கையை ஏற்காத அனைத்து மாநிலங்களும், மறுபரிசீலனை செய்து, அதை ஏற்க வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் கூறினார்.
புதுச்சேரியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: இந்தியா எழுச்சி பெறும் நேரம் உருவாகியுள்ளது. தேசிய நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கு அரசியல்வாதிகள் செவிசாய்க்காவிட்டால், நமது சவால்கள் சிக்கலாகிவிடும்.
அந்நிய படையெடுப்பு காரணமாக, நாட்டின் பாரம்பரியம் பாதிக்கப்பட்டது. சனாதனப் பெருமை மீண்டும் கட்டி எழுப்பப்படுகிறது. மொழிகளால் நாம் எவ்வாறு பிரிக்கப்பட முடியும்? இந்தியா போல வேறு எந்த நாடும் மொழிகளுக்குள் செழுமையாக இல்லை. நமது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்கள் 22 மொழிகளில் பேசலாம். ஒற்றுமையாக இருப்பதைத் தவிர, வேறு எதையும் சனாதனம் நமக்கு கற்பிக்கவில்லை.
புதிய கல்விக் கொள்கையை உருவாக்குவது, நாட்டின் கல்விப் பயணத்தில் திருப்புமுனையாக கருதப்படுகிறது. இது உலகின் சிறந்த கல்விக் கொள்கைகளில் ஒன்றாகும். தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. நமது இளைஞர்கள் தங்கள் திறமையையும், ஆற்றலையும் முழுமையாகப் பயன்படுத்த புதிய கல்விக் கொள்கை அனுமதிக்கிறது.
புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளாத மாநிலங்கள், மறுபரிசீலனை செய்து, அதை ஏற்க வேண்டும். 2047-ல் நம் நாட்டை வளர்ந்த நாடாக மாற்றுவதில், புதிய கல்விக் கட்டமைப்பு முக்கியப் பங்கு வகிக்கும்.
ஆராய்ச்சி என்பது ஒரு தன்னிறைவு பெற்ற நாட்டின் ஆன்மாவாகும். நாடு எதிர்கொள்ளும் சவால்களை எதிர்கொள்ள, பொருத்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட வேண்டும்.
உலக அளவில் சிறந்த நிறுவனங்களுடன் போட்டியிடும் வகையில் நமது கல்வி நிறுவனங்களை மாற்றியமைக்க வேண்டும். கல்வித் துறையில் முதலீடு செய்வதை, நிறுவனங்கல் பரிசீலிக்க வேண்டும். அதேநேரத்தில், கல்வி வணிகமயமாகி விடக்கூடாது. மாறாக இந்தியாவின் பாரம்பரிய குருகுல முறையுடன் ஒத்துப்போக வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில், புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ.சரவணகுமார், எம்.பி.க்கள் வைத்திலிங்கம், செல்வகணபதி, எம்எல்ஏ கல்யாணசுந்தரம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.