ஈரோடு: மூத்த வழக்கறிஞரும், உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷின் தந்தையுமான வி.கே.முத்துசாமி காலமானார். ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி அருகேயுள்ள எழுமாத்தூர், வண்ணாம்பாறை, வக்கீல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் வி.கே.முத்துசாமி (91).
வயது மூப்பு காரணமாக உடல்நலக் குறைவு ஏற்பட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் (16-ம் தேதிமாலை காலமானார். அவரது உடல் எழுமாத்தூர் வக்கீல் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
மறைந்த வி.கே.முத்துசாமியின் உடலுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.தண்டபாணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது இறுதிச் சடங்குகள் எழுமாத்தூர் வக்கீல் தோட்டத்தில் நேற்று மாலை நடைபெற்றது. அவரது மகனும், உச்சநீதிமன்ற நீதிபதியுமான எம்.எம்.சுந்தரேஷ் இறுதிச் சடங்குகளை செய்து சிதைக்கு தீ மூட்டினார். உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக்கறிஞர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.