கனமழையினால் சபரிமலையில் தற்போது மண் சரிவு ஏற்பட்டுள்ளதால் நீலிமலை பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே ஐயப்ப பக்தர்கள் மாற்றுப் பாதையில் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
சபரிமலை ஐயப்பன் கோயில் சந்திதானத்துக்கு பம்பையில் இருந்து நீலிமலை பாதை உள்ளது. இதில் மரக்கூட்டம், அப்பாச்சிமேடு வழியாக சுமார் 5 கி.மீ. தூரத்தில் சந்நிதானத்தை அடையலாம்.இப்பகுதியில் தற்போது கனமழை பெய்து மண் மற்றும் பாறைகள் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் இந்த பாதையில் மலையேற தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
எனவே, பக்தர்கள் பம்பையில் இருந்து சுவாமி ஐயப்பன் சாலையில் மலையேறிச் செல்ல அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்த சாலை சந்நிதானத்துக்கு பொருட்களை ஏற்றிச் செல்லும் டிராக்டர் பாதையாகும். மேலும் ஆம்புலன்ஸ் போன்ற அவசர வாகனங்களும் இந்த சாலை வழியே செல்லும். தற்போது கனமழை காரணமாக மாற்றுப் பாதையான இதில் பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்காக சென்று கொண்டிருக்கின்றனர்.