விழுப்புரம்: பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் சேர்ந்து பேசி முடிவெடுத்தால் மட்டுமே கட்சி பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்று கவுரவத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்துள்ளார்.
‘நீயா, நானா’ என்று பார்த்து விடுவோம் என, மகன் அன்புமணிக்கு பகிரங்கமாக பாமக நிறுவனர் ராமதாஸ் சவால் விடுத்து அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கட்சியில் அன்புமணியின் ஆதரவாளர்களை அடையாளம் கண்டு, அவர்களை பொறுப்பில் இருந்து நீக்கி வருகிறார். அந்த வகையில், மாநில பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, சமூகநீதி பேரவைத் தலைவர் வழக்கறிஞர் பாலு மற்றும் 60-க்கும் மேற்பட்ட மாவட்டத் தலைவர்கள், செயலாளர்களை நீக்கியுள்ளார்.
இந்நிலையில், தன்னால் நியமிக்கப்பட்ட புதிய நிர்வாகிகளுடன், திண்டிவனம் அடுத்த தைலாபுரத்தில் 2-வது நாளாக நேற்றும் ராமதாஸ் ஆலோசனை நடத்தினார். இதில், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி மற்றும் கோவை, ஈரோடு, நாமக்கல், திருச்சி, மதுரை, திருநெல்வேலி உட்பட 16 மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இளைஞர்களுக்கு முக்கியத்துவம்: அப்போது பேசிய ராமதாஸ், “2026-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலை மனதில்கொண்டு பணியாற்ற வேண்டும், இளைஞர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என அறிவுறுத்தினார்
முன்னதாக செய்தியாளர்களிடம் பாமக கவுரவத் தலைவர் ஜி.கே.மணி கூறும்போது, “பாமக தற்போதுள்ள சிக்கல்களைச் சரி செய்ய மற்றவர்கள் பேசுவதைவிட, அவர்கள் இருவரும் (ராமதாஸ் – அன்புமணி) பேசி முடிவெடுக்க வேண்டும். இருவரும் அரசியல் விவரம் புரியாதவர்கள் அல்ல. நாட்டுக்கே அறிவுரை, ஆலோசனை வழங்கக்கூடிய நல்ல தலைவர்கள். இருவரும் பேசி முடிவெடுத்து, முன்னெடுத்து செல்வதுதான் கட்சிக்கு பலமாகவும், வளமாகவும் இருக்கும். தேர்தலுக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
மன உளைச்சலில் உள்ள கட்சியினருக்கு இதுவே நல்ல தீர்வாக இருக்கும். இதற்காகத்தான் தினமும் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறோம்.
பொதுவெளியில் பகிரங்கமாக அன்புமணி மன்னிப்பு கேட்டுள்ளதைப் பற்றி நான் எதுவும் சொல்ல முடியாது. இருவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.