தேனி: சபரிமலை பகுதியில் பெய்து வரும் கனமழையினால் பக்தர்கள் நனைந்துகொண்டே ஐயப்பனை தரிசிக்கச் செல்லும் நிலை உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் ஒவ்வொரு மாதாந்திர பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். இதன்படி இம்மாத வழிபாட்டுக்காக கடந்த 14-ம் தேதி நடை திறக்கப்பட்டது. தந்திரிகள் கண்ட ரரு ராஜீவரு, பிரம்மதத்தன் ராஜீவரு ஆகியோர் தலைமையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து அதிகாலை முதல் இரவு வரை தொடர் வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன.
தற்போது இடுக்கி, பத்தனம்திட்டா உள்ளிட்ட மாவட்டங்களில் ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டு கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நிலக்கல், பம்பை, சபரிமலை உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் பக்தர்கள் மழை கோட் அணிந்தபடி சந்நிதானத்துக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். பலரும் தற்காப்பு முன்னேற்பாடுகளுடன் வராததால் நனைந்துகொண்டே சபரிமலைக்கு படியேறிச் செல்கின்றனர்.
இந்நிலையில், மலை அடிவாரத்தில் உள்ள பம்பை நதியில் வெள்ளம் கரைபுரண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆகவே, பக்தர்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என்று அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. கேரளாவில் பெய்து வரும் கனமழையினால் சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாய் குறைந்துள்ளது.