சென்னை: இடைநிற்றல் மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்க்க கள ஆய்வு நடத்திய விருதுநகர் மாவட்ட ஆட்சியருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் இடைநிற்றல் ஆன மாணவர்களை, மீண்டும் பள்ளியில் சேர்க்கும் வகையில் கள ஆய்வு செய்த ஆட்சியர் ஜெயசீலன், மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதுதொடர்பான வீடியோ அன்மையில் வெளியானது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியரின் இந்த நடவடிக்கையை பலர் வெகுவாக பாராட்டினர்.
இது தொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்: “வாழ்த்துகள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர், கடந்த 4 ஆண்டுகளில் ‘இடைநிற்றலே இல்லாத’ மாநிலமாகத் தமிழ்நாட்டை உயர்த்தியுள்ளோம்! இந்த நிலை தொடர அர்ப்பணிப்போடு பணியாற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கும் வாழ்த்துகள்!
ஆசிரியர்களுக்கும், பொதுமக்களுக்கும் என் வேண்டுகோள்: இந்த இயக்கத்தில் நீங்களும் இணைய வேண்டும்! உங்கள் பகுதியில், பள்ளி செல்லாத மாணவர்கள் இருந்தால் கண்டறியுங்கள். ‘கல்வியை மிஞ்சிய செல்வம் எதுவும் இல்லை’ என அவர்களுக்கு உணர்த்துங்கள்.
காலை உணவுத் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classrooms), நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் என ஒவ்வொரு நிலையிலும் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்ல அரசின் திட்டங்கள் இருப்பதை எடுத்துக் கூறுங்கள். கல்வியில் சிறந்த தமிழ்நாடு’ என்பதை உறுதிசெய்வோம்!” என்று முதல்வர் தனது பதிவில் கூறியுள்ளார்.