பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளுக்கு செல்கிறார். இதில் கனடாவில் நடைபெறும் ஜி7 உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்.
இதுகுறித்து வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய 3 நாடுகளில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்கிறார்.
சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவ்லிட்ஸ் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி ஜூன் 15, 16 ஆகிய இரு நாட்களில் சைப்ரஸில் பயணம் மேற்கொள்கிறார். 20-க்கும் மேற்பட்ட ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் சைப்ரஸ் செல்வது இதுவே முதல்முறை. இப்பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக சைப்ரஸ் அதிபருடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார். மேலும் தொழில் அதிபர்கள் கூட்டத்தில் உரையாற்றுவார்.
இதையடுத்து கனடா பிரதமர் மார்க் கார்னி அழைப்பை ஏற்று, அந்நாட்டில் ஜூன் 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெறும் வருடாந்திர ஜி7 உச்சி மாநாட்டில் மோடி பங்கேற்கிறார். பிரதமர் மோடி பங்கேற்கும் 6-வது ஜி7 உச்சி மாநாடு இதுவாகும்.
இந்த மாநாட்டில், எரிசக்தி பாதுகாப்பு, தொழில்நுட்பம், புதிய கண்டுபிடிப்புகள், ஏஐ-ஆற்றல் இணைப்பு, குவாண்டம் போன்ற விஷயங்களில் உலகளாவிய பிரச்சினைகள் குறித்து ஜி-7 தலைவர்கள், தொடர்புடைய நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் தலைவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடுவார். உச்சி மாநாட்டுக்கு இடையில் பிரதமர் மோடி பல்வேறு தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளும் மேற்கொள்வார்.
இதையடுத்து குரோஷியா பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிக் அழைப்பின் பேரில் ஜூன் 19-ல் பிரதமர் மோடி அந்நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். இந்தியப் பிரதமர் ஒருவர் குரேஷியா செல்வது இதுவே முதல்முறையாகும். இப்பயணத்தில் பிரதமர் மோடி, குரேஷிய அதிபரை சந்திக்கிறார். குரேஷிய பிரதமருடன் இருதரப்பு பேச்சுவார்த்தை மேற்கொள்கிறார். பிரதமரின் இந்தப் பயணம் ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பு நாட்டுடனான இந்தியாவின் உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கைக்கு பிறகு பிரதமர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.