அகமதாபாத் விமான விபத்தில் இறந்த துணை விமானி கிளைவ் குந்தர் மிகவும் புத்திசாலி மற்றும் ஒழுக்கமான மாணவர் என்று அவரது பேராசிரியர் ஊர்வசி கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கடந்த வியாழக்கிழமை நிகழ்ந்த விமான விபத்தில் இறந்தவர்களில் 12 விமான ஊழியர்களும் அடங்குவர். இவர்களில் துணை விமானி கிளைவ் குந்தர் 1,100 மணி நேரம் விமானத்தில் பறந்த அனுபவம் கொண்டவர்.
கிளைவ் குந்தர் பற்றி, அவருக்கு மும்பை வில்சன் கல்லூரியில் 11 மற்றும் 12-ம் வகுப்புகளில் இயற்பியில் பாடம் நடத்திய பேராசியர் ஊர்வசி கூறியதாவது:
கிளைவ் மிகவும் புத்திசாலி, மிகவும் ஒழுக்கமானவர். வகுப்புக்கு ஒருபோதும் தாமதமாக வர மாட்டார். படிப்பு தொடர்பாக அவரது பணிகள் மிகவும் நேர்த்தியாகவும் சுத்தமாகவும் முறையாகவும் இருக்கும். அவரது ஒழுக்கமே அவரை ஒரு வெற்றிகரமான விமானியாக மாற்றியிருக்கும் என நினைக்கிறேன்.
விமான விபத்து பற்றிய செய்திகளை தொலைக்காட்சியில் பார்க்கும்போது, விபத்தில் இறந்த துணை விமானி எனது மாணவன் கிளைவ் எனத் தெரியவந்தது. இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
கிளைவ் பற்றிப் பேசுவது மிகவும் வேதனையாக இருந்தது. ஏதாவது வித்தியாசமாக செய்ய விரும்புவதாக கிளைவ் ஒருமுறை என்னிடம் கூறினான். இவ்வளவு சுறுசுறுப்பான ஒரு மாணவன், தொழிலை நேசித்தவன், மகிழ்ச்சியாகவும் ஒழுக்கமாகவும் வாழ விரும்பியவன் இப்போது உயிருடன் இல்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இவ்வாறு பேராசிரியர் ஊர்வசி கூறினார்.