ராஜஸ்தானில் போலி மந்திரவாதிகள் கொடுத்த உணவுப்பொருளை சாப்பிட்ட 3 பேர் உயிரிழந்தனர். அவர்களிடமிருந்து ரொக்கம் உட்பட சுமார் ரூ.50 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளை அடித்துச் சென்றனர்.
ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் நகரின் கஜுவாலா பகுதியைச் சேர்ந்தவர் அப்துல் கப்பார். ஷைத்தான் சிங் மற்றும் விக்ரம் சிங் ஆகிய இருவரும் கடந்த வெள்ளிக்கிழமை மந்திரவாதிகளை அழைத்துக் கொண்டு கப்பாரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். பிளாக் மேஜிக் மூலம் பணத்தை இரட்டிப்பாக்கித் தருவதாகக் கூறிய அவர்கள் சில சடங்குகளை செய்துள்ளனர்.
இந்த சடங்கில், ஷைத்தான் சிங், விக்ரம் சிங், அப்துல் கப்பார் மற்றும் அவருக்கு தெரிந்த ரஜேந்திர சிங் ஆகிய 4 பேரும் பங்கேற்றுள்ளனர். அப்போது, சில உணவுப் பொருளை அந்த 4 பேருக்கும் மந்திரவாதிகள் கொடுத்துள்ளனர். அதைச் சாப்பிட்ட அவர்கள் மயங்கி விழுந்துள்ளனர். இதையடுத்து, அந்த வீட்டில் இருந்த ரொக்கம் உட்பட சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பொருட்களை அந்த மந்திரவாதிகள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் மயக்கமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதில் 3 பேர் உயிரிழந்தனர். ஒருவர் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸார் சம்பவம் நடந்த வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது, சடங்குகள் செய்ததற்கான அறிகுறிகள் தெரிந்தது. இதுகுறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலி மந்திரவாதிகள் விஷம் கலந்த உணவுப்பொருளை கொடுத்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.