பாஜக தலைவரும், சமூக சேவகருமான பசுபதிநாத் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 ஆண்டுகள் கழிதது, 16 பேருக்கு ஆயுள் தண்டனையை வாராணசி நீதிமன்றம் வழங்கியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் வாராணசியிலுள்ள சிக்ரா பகுதியைச் சேர்ந்தவர் பசுபதிநாத். சமூக சேவகரான இவர், பாஜக நிர்வாகியாகவும் இருந்து வந்தார். இவரது மகன் ராஜ்குமார் சிங் (42). கடந்த 2022-ல் அப்பகுதியிலுள்ள சாராயக் கடையில் சிலர், தகராறில் ஈடுபட்டனர். அதை ராஜ்குமார் சிங் தட்டிக் கேட்டார். இதையடுத்து ராஜ்குமார் சிங்கை தாக்க ஒரு கும்பல் ஓடி வந்தது. இதைத் தொடர்ந்து தனது மகனைக் காப்பாற்ற பசுபதிநாத் ஓடினார். அந்த கும்பல், பசுபதிநாத்தை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடியது. மகனைக் காப்பாற்றும் முயற்சியில் பசுபதிநாத் உயிரிழந்தார்.
இந்த வழக்கில் 18 பேர் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. இதில் 2 பேர் மைனர் என்பதால் அவர்கள், சிறுவர் கூர்நோக்கு இல்லங்களுக்கு அனுப்பப்பட்டனர். கடந்த 3 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்ட 16 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார். மேலும் அவர்களுக்கு அபராதம் வழங்கியும் நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
குற்றம்சாட்டப்பட்ட 18 பேரில் 2 பேர் மைனர்களாக உள்ள நிலையில், அவர்கள் மீதான வழக்கு சிறுவர் கூர்நோக்கு நீதி வாரியத்தின் முன்பு உள்ளதாக அரசு வழக்கறிஞர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.