கடலூர்: சிதம்பரத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம் விடிய விடிய நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
சிதம்பரம் வடக்கு மெயின் மெயின் ரோடு பெரிய அண்ணா குளம் அருகே ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 55 ஆண்டுகளாக வெகு விமரிசையாக திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 56 ஆண்டுக்கான திருவிழா கோயிலில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் நாளான நேற்று இரவு (ஜூன்.14) கோயிலுக்கு அருகே உள்ள பெரிய அண்ணா குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெற்றது. முன்னதாக சிதம்பரம் வடக்கு வீதி, கீழ வீதி, தெற்கு வீதி, மேல வீதி வழியாக சாமி ஊர்வலம் நடைபெற்றது.
இந்த தெப்ப உற்சவத்தில் குளத்தை 3 முறை சுற்றி வந்த பிறகு பின்பு மீண்டும் சாமி கோயிலுக்கு மேல தாளம் முழங்க கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வான வேடிக்கைகளும் நடைபெற்றது. முதல் முறையாக பெரிய அண்ணா குளத்தில் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் கோயில் தெப்ப உற்சவம் நடைபெற்றுள்ளது. இது பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவிழாவில் பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆன்மிக இசை நிகழ்ச்சி நடைபெற்றது.