அகமதாபாத் விமான விபத்து, இஸ்ரேல்-ஈரான் போர் ஆகியவற்றால் இந்திய விமானப் போக்குவரத்துத் துறைக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விமானப் பயணக் கட்டணங்கள் உயரும் ஆபத்து உருவாகியுள்ளது.
இஸ்ரேல் – ஈரான் இடையிலான போரால் அவற்றின் வான்வெளி மூடப்பட்டுள்ளது. இதனால் விமானங்கள் சுற்றிச் செல்ல வேண்டியிருப்பதால் ஏர் இந்தியா உட்பட உலகின் பல விமான நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் லண்டன், துபாய், அபுதாபி, ரியாத், பிராங்பர்ட் போன்ற விமான நிலையங்களில் ஆயிரக்கணக்கான பயணிகள் சிக்கித் தவிப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்துத் துறை உலகிலேயே வேகமாக வளர்ந்து வரும் துறையாகும். ஆண்டுதோறும் 15 சதவீத வளர்ச்சியுடன் இது செயல்படுகிறது. உலகில் மூன்றாவது இடத்தில் உள்ளது. ஆனால் சமீபத்திய சில சம்பவங்கள் அதன் முன்னேற்றத்தை பின்னோக்கி இழுப்பதாக உள்ளது.
முதலாவதாக, ஆபரேஷன் சிந்தூருக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது வான்வெளியை மூடியது, இதனால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் இந்திய விமானங்கள் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது. இது அவற்றின் பயண செலவை அதிகரித்துள்ளது.
தற்போது இஸ்ரேல்-ஈரான் இடையிலான போராலும் இந்தியாவிருந்து ஐரோப்பா மற்றும் அமெரிக்கா செல்லும் விமானங்களின் பயண தூரம் நீளும். உதரணமாக மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லியில் இருந்து புறப்படும் விமானங்கள் வட ஆப்பிரிக்கா வழியாக ஐரோப்பா செல்ல வேண்டியிருக்கும். இது, பயணக் கட்டணங்கள் 10-20 சதவீதம் அதிகரிக்க வழிவகுக்கும் என்பது விமானப் போக்குவரத்து நிபுணர்களின் கருத்தாகும்.
மேலும், ஒரு பெரிய விமான விபத்து ஏற்படும்போது, காப்பீட்டு நிறுவனங்களின் இழப்பீடு செலவு அதிகரிக்கும். இதனால் அகமதாபாத் விபத்து, அடுத்த ஆண்டு முதல் காப்பீட்டு பிரீமியத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். இதில் வெவ்வேறு விமானங்களுக்கான காப்பீட்டு பிரீமியம் 5 முதல் 15 சதவீதம் வரை அதிகரிக்கக்கூடும் என காப்பீட்டுத் துறை நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர். இதன் காரணமாகவும் விமானங்களின் பயணக் கட்டணம் உயரும் சூழல் தெரிகிறது.