Close Menu
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    India VaaniIndia Vaani
    வரி விளம்பரம்
    Wednesday, August 13
    • Home
    • மாநிலம்
    • மாவட்டம்
    • தேசியம்
    • உலகம்
    • அரசியல்
    • ஆன்மீகம்
    • சினிமா
    • விளையாட்டு
    • கல்வி
    • மேலும்
      • வணிகம்
      • மருத்துவம்
      • அறிவியல்
      • தொழில்நுட்பம்
      • லைஃப்ஸ்டைல்
      • சிறப்பு கட்டுரைகள்
    India VaaniIndia Vaani
    Home»மாநிலம்»“கமலை குறை சொல்லாதவர்கள் விஜய்யை குறை சொல்வதில் அர்த்தமில்லை!” – சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி
    மாநிலம்

    “கமலை குறை சொல்லாதவர்கள் விஜய்யை குறை சொல்வதில் அர்த்தமில்லை!” – சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி

    adminBy adminJune 15, 2025No Comments5 Mins Read
    Share Facebook Twitter Pinterest Copy Link LinkedIn Tumblr Email VKontakte Telegram
    “கமலை குறை சொல்லாதவர்கள் விஜய்யை குறை சொல்வதில் அர்த்தமில்லை!” – சி.பி.ராதாகிருஷ்ணன் சிறப்புப் பேட்டி
    Share
    Facebook Twitter Pinterest Email Copy Link


    ஆளுநர் பொறுப்பில் இருப்பவர்கள் அதிகம் அரசியல் பேசமாட்டார்கள். ஆனால், மகாராஷ்டிரா ஆளுநரான சி.பி.ராதாகிருஷ்ணன் போன்றவர்கள் இதற்கு விதிவிலக்கானவர்கள். கடந்த காலங்களில் ஜெயலலிதா, கருணாநிதி என இரு பெரும் துருவங்களுடனும் அமர்ந்து பேசி கூட்டணிகளை கட்டமைத்தவர் பாஜக மாநில தலைவராக இருந்த சிபிஆர். தமிழகம் வரும் போதெல்லாம் அதிரடியான அரசியல் கருத்துகளையும் பேசி வரும் சிபிஆர், ‘இந்து தமிழ் திசை’க்கு அளித்த பிரத்யேக நேர்காணல் இது.

    ஆளுநர்கள், அரசியல்வாதிகள் போல் செயல்படுவதால் தான், மாநில அரசுகளுடன் மோதல் ஏற்படுகிறது என்ற கருத்து குறித்து..?

    ஆளுநர்கள் அரசியல்வாதிகள் போல் செயல்பட முடியாது என்பதுதான் அரசியல் சாசனம். இருந்தும், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில், இது போன்ற மோதல் போக்கு வருவதற்கான காரணங்களை நாம் ஆராயவேண்டும். உதாரணமாக, மேற்கு வங்காளத்தில், ஆளும் வர்க்கத்திற்கு எதிராக இருக்கும் யாராக இருந்தாலும், அவர்களை அரசியல் படுகொலை செய்வது என்பது மிகச் சாதாரணமாக நடந்து வந்தது. அந்த விஷயத்தில் ஆளுநர் தலையிட்டதால்தான், அரசியல் படுகொலைகள் குறைந்திருக்கிறது.

    அதுபோல, கேரளாவில் ஆளுங்கட்சியின் முழு நேர ஊழியர்களை, அமைச்சர்களின் தனிச்செயலாளர்களாக நியமிப்பதையும், அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு அரசின் ஓய்வூதியம் பெறுவதையும் ஆளுநர் தான் வெளியில் கொண்டு வந்தார். மக்களுடைய வரிப்பணத்தை ஒரு கட்சியின் நலனுக்காக பயன்படுத்துகிற போது, ஆளுநர்கள் வேடிக்கை பார்க்க முடியாது.

    தமிழகத்தில் ஆளுநர் – அரசு மோதலுக்கு யார் காரணம் என நினைக்கிறீர்கள்?

    ஒரு ஆளுநரை மிக தரக்குறைவாக விமர்சித்தவர்கள், இங்கு ஆட்சிப் பொறுப்பில் இருக்கின்றனர். இது தவறான போக்கு. ஆளுநர் உரை தொடங்கும் முன் தேசியகீதம், அதனைத் தொடர்ந்து மாநில பாடல், உரை முடிந்த பின் தேசிய கீதம் இசைப்பது நாடு முழுவதும் உள்ள நடைமுறை. இதில், தமிழகத்திற்கு மட்டும் விதிவிலக்கு கேட்டால் எப்படி கிடைக்கும்? இது போன்ற பல காரணங்கள் ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் இடையே மோதல் ஏற்பட காரணமாய் அமைந்தது. ஆளுநர் உடனான மோதல் போக்கு, மக்களிடம் தங்களுக்கு ஆதரவைப் பெற்றுத் தரும் என்று தமிழக அரசு கருதியதே இந்தப் போக்கு வலுப்பட காரணம் என நினைக்கிறேன்.

    தமிழக அரசின் சட்ட மசோதாக்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஆளுநருக்கு எதிராகத்தானே வந்தது..?

    தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு முழுமையான தீர்ப்பு அல்ல. அது ஆய்வுக்கு உட்பட்டது என்று கருதுகிறேன். அந்த தீர்ப்பை எழுதிய நீதிபதிகள் சொல்லாத கருத்துகள் எல்லாம், தமிழகத்தில் கருத்தாக்கப்பட்டுள்ளது. சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் தருவதற்கு, ஆளுநர் எவ்வளவு நாட்கள் எடுத்துக்கொள்ளலாம் என்ற கால வரையறை அரசியல் சாசனத்தில் இல்லை. அந்த கால வரைமுறை வேண்டும் என்கின்ற வகையில் இந்த தீர்ப்பு வந்துள்ளதாகத்தான் நான் கருதுகிறேன்.

    சமீபத்தில், தமிழக ஆளுநர் ஒரு மசோதாவுக்கு ஒப்புதல் கொடுத்தபோது, “நீதிமன்றத்திற்கு சென்று விடுவோம் என்ற பயத்தின் காரணமாக, ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளார்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தது பற்றி..?

    ஆளுநருக்கு பயம் என்பது தேவையில்லாத ஒன்று. மசோதாவில் கையெழுத்திட்டால், பயத்தால் கையெழுத்திடுகிறார்கள் என்பதும், கையெழுத்துப் போடாவிட்டால், இவர் வேண்டுமென்றே அரசுக்கு எதிராக, ஜனநாயகத்துக்கு எதிராக இருக்கிறார் என்று சொல்வதும் எத்தகைய போக்கு என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

    மத்திய அரசை, ஒன்றிய அரசு என அழைப்பதை கடுமையாக எதிர்க்கிறீர்களே..?

    ஒன்றிய அரசு என்று சொல்வதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அது பிரிவினையை ஏற்படுத்துகிறது. தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பஞ்சாயத்து யூனியன் என்று ஒன்று இருக்கிறது. யூனியனுக்கு கீழே தான், பஞ்சாயத்துகள் இருக்கின்றன. மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொன்னால், மாநில அரசை பஞ்சாயத்து அரசு என்று அழைக்கலாம் என நான் ஒரு புதிய மொழிபெயர்ப்பைச் சொன்னால், அது மோதல் போக்கைத்தான் உருவாக்குமே தவிர மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு உதவாது.

    ஒன்றிய அரசு என்பதை எதிர்க்கும் நீங்கள், ‘திராவிட மாடல்’ அரசு என்று சொல்வதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

    குஜராத் மாடல் அரசு என்பதற்கு மாற்றாக இவர்கள் திராவிட மாடல் அரசு என்ற வாசகத்தைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஒரு அரசு சிறப்பாக நடைபெறுகிறதா இல்லையா என்று தான் மக்கள் பார்ப்பார்களே தவிர, பெயரை வைத்து மதிப்பிட மாட்டார்கள். பொல்லான் என்று பெயர் வைத்தவர் தான் சுதந்திரத்துக்காக போராடிய தீரன் சின்னமலையைக் காப்பாற்றினார். நல்லான் என்று பெயர் வைத்தவர்தான் தீரன் சின்னமலையைக் காட்டிக் கொடுத்தார்.

    இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழகம் கல்வியில் சிறப்பான இடத்தில் உள்ள நிலையில், மும்மொழிக் கொள்கையை கட்டாயப்படுத்த வேண்டுமா?

    மூன்றாவதாக ஒரு மொழியைக் கற்றுக்கொள்வதன் மூலமாக, பிற மாநில மக்களுக்கும் நமக்கும் இருக்கிற நெருக்கத்தை நாம் வெளிப்படுத்திக் கொள்ளலாம். அது தேசியத்தின் ஒற்றுமைக்கு நல்லது. மூன்றாவது மொழியாக இந்தியை படிக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆனால், இந்தியாவில் இந்தி மட்டுமே தெரிந்தவர்கள் 30 சதவீதம் பேர் இருக்கிறார்கள். தமிழகத்திலிருந்து பெரிய தேசிய தலைவர்கள் உருவாக வேண்டுமானால், இந்தி மொழியை கற்றுக்கொள்வது உதவியாக இருக்கும். இன்னொரு மொழியைக் கற்றுக் கொள்வதன் மூலம் உங்களுக்கு வாய்ப்புகள் பெருகுமே தவிர, ஒருபோதும் தாழ்ந்து விடமாட்டீர்கள்.

    புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான் தமிழகத்திற்கான கல்வி நிதியை ஒதுக்குவேன் என்று மத்திய அரசு கூறுவது நியாயமா?

    தமிழக அரசு ஒரு திட்டத்திற்கு நிதி ஒதுக்கிறது. மாவட்டங்கள் அந்த நிதியை எடுத்து வேறு திட்டங்களை செயல்படுத்தினால், மாநில அரசு ஒத்துக்கொள்ளுமா? அதுபோல, மத்திய அரசு, புதிய கல்விக் கொள்கைக்கு நிதி ஒதுக்கும் போது, எங்களுக்கு அந்த திட்டமே வேண்டாம் என்றால், நிதி மட்டும் எப்படி வழங்க முடியும்?

    வைகோவுக்கு திமுக ராஜ்யசபா சீட் வழங்காததை எப்படி பார்க்கிறீர்கள்?

    இது முற்றிலும் அரசியல் தொடர்பான கேள்வி. ஒரு ஆளுநர் இதற்கு பதில் சொல்வது சரியாக இருக்கும் என்று கருதவில்லை. இருப்பினும் அவரோடு பழகியவன் என்ற முறையில், வைகோவின் வயது காரணமாக இந்த வாய்ப்பு மறுக்கப்பட்டு இருக்கும் என நினைக்கிறேன்.

    ஆபரேஷன் சிந்தூர் வெற்றியை பாஜக ஆளும் மாநில அரசுகள் கொண்டாடும் முன்பாகவே, தமிழகத்தில் திமுக அரசு வெற்றி ஊர்வலம் நடத்தி கொண்டாடிவிட்டதே?

    எந்த ‘பிராண்ட்’டை விற்பனை செய்தால் அமோகமாக விற்பனையாகும் என்பதை உணர்ந்து, அதை கையில் எடுப்பது திமுக-வின் வழக்கம். 1967 முதல் திமுக இதை சரியாக செய்து வருகிறது. இதை ஆளுநராகச் சொல்லவில்லை. அரசியலில் நீண்ட காலம் இருந்தவன் என்ற வகையில் சொல்கிறேன்.

    மதத்தால், இனத்தால் தமிழர்களைப் பிரிக்க மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுவதாக அமைச்சர் சேகர்பாபு சொல்கிறாரே..?

    தமிழகத்தில் தான் முருகனுக்கான ஆறு படை வீடுகளும் உள்ளன. இங்கு முருக பக்தர்கள் மாநாடு நடத்தக்கூடாது என்று சொல்வது எத்தகைய சிந்தனை என்பது என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

    நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?

    ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்க, எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. புதிய வரவாக வந்துள்ள விஜய் குறித்து உடனடியாக விமர்சனங்களை வைப்பது சரியாக இருக்காது. எல்லோரும் எல்லாவற்றையும் ஒரு நொடிப் பொழுதில் கற்றுக்கொள்ள முடியாது. அவருக்கும் உரிய காலம் தேவைப்படும்.

    ஆனால், வரும்போதே திமுக-வையும், பாஜக-வையும் தனது கொள்கை எதிரிகளாக அவர் அறிவித்துவிட்டாரே?

    அவருக்கு அப்படி ஒரு உணர்வை சிலர் ஊட்டி இருக்கலாம். அதனால அவர் அப்படி செய்திருப்பார். திமுக-வுக்கு எதிராகப் பேசி தொலைக்காட்சி பெட்டியை உடைத்த கமல்ஹாசன், இன்றைக்கு அதே அணியின் சார்பில் எம்பி ஆகவில்லையா? கமலை குறை சொல்லிப் பேசாதவர்கள், விஜய் குறித்து குறை சொல்லிப் பேசுவதில் அர்த்தமில்லை.

    தமிழ்நாட்டில் போதை கலாசாரம், கஞ்சா பழக்கம் அதிகரித்து விட்டது என்று தெரிவித்திருந்தீர்கள். மகராஷ்டிராவில் தொடங்கி பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலும் போதை கலாசாரம் இருக்கத்தானே செய்கிறது?

    மகாராஷ்டிராவில் போதை கலாசாரம் இல்லை என்று நான் எங்கேயும் கூறவில்லை. ஆனால், தமிழகத்தில் இன்றைக்கு கிராமங்கள் வரைக்கும் கஞ்சா பழக்கம் வந்துவிட்டது. தமிழக முதல்வர் ஒருமுறை கஞ்சாவுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தார். அதற்காக நான் பாராட்டு தெரிவித்தேன். அப்போது அதிக அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை சிலர் அரசுக்கு எதிராக பயன்படுத்திக் கொண்டு பேசினார்கள். தமிழக முதல்வர் இதுபோன்ற விமர்சனங்களை எல்லாம் கண்டு பயப்படாமல், கஞ்சா விற்பவர்கள் யாராக இருந்தாலும், மிக கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கோவை குண்டுவெடிப்பு சமயத்தில் அங்கு எம்பி-யாக இருந்தவர் நீங்கள். இப்போதும் கோவைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கிறதா?

    இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு கூட கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பாக கார் வெடிகுண்டு வெடித்த சம்பவம் நடந்தது. இந்த அரசு, அதை வழக்கம்போல் மறைக்க முயன்றது. இஸ்லாமிய தீவிரவாதிகளால் தமிழகத்தின் அமைதிக்கு ஆபத்து இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. தீயை பாய் போட்டு மூட முடியாது. இஸ்லாமிய தீவிரவாதிகளை, இஸ்லாமிய சமுதாயத்தில் இருந்து தனிமைப்படுத்துவது தான் உண்மையான அமைதிக்கு வழிவகுக்கும். தீவிரவாத நடவடிக்கைகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

    மீண்டும் தமிழக அரசியலுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளதா?

    ஒரு வழக்கறிஞர் நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற பின்பு, மீண்டும் வழக்கறிஞராக பணியாற்ற முடியாதே. இது ஆளுநராக இருப்பதற்கும், அரசியல் கட்சியின் உறுப்பினராக இருப்பதற்கும் உள்ள வேறுபாடு. மேலும், இதைப்பற்றி நான் சிந்திக்கவும் இல்லை.



    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email Telegram Copy Link
    admin
    • Website

    Related Posts

    மாநிலம்

    தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு

    August 13, 2025
    மாநிலம்

    மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

    August 13, 2025
    மாநிலம்

    ‘தொழிற்சங்க சொத்து விவகாரத்தில் அவதூறு’ – ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு வைகோவுக்கு நோட்டீஸ்

    August 13, 2025
    மாநிலம்

    போராடும் தூய்மை பணியாளர்களுக்கு ஆதரவு: தமிழிசையை போலீஸார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு

    August 13, 2025
    மாநிலம்

    ஆளுநரின் சுதந்திர தின தேநீர் விருந்து: தமிழக காங், விசிகவை தொடர்ந்து மார்க்சிஸ்ட் புறக்கணிப்பு

    August 13, 2025
    மாநிலம்

    79-வது சுதந்திர தினம்: தமிழகம் முழுவதும் பாதுகாப்புப் பணியில் 1 லட்சம் போலீஸார்

    August 13, 2025
    Add A Comment
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    • தூய்மைப் பணியாளர்கள் கலைந்து செல்ல உத்தரவு: கைது செய்ய காவல் துறை ஆயத்தம் – ரிப்பன் மாளிகையில் பரபரப்பு
    • அவளுடைய நீண்ட ஆயுள் ரகசியம்? 87 வயதான ஷீலா ஐசக்ஸ் ஆரோக்கியமாக இருப்பதற்கான ஒரு உண்மையான அன்பை வெளிப்படுத்துகிறார்
    • ‘வாக்கு திருட்டுக்கு எதிராக உங்கள் குரலை உயர்த்துங்கள்’ – பொது மக்களுக்கு காங்கிரஸ் அழைப்பு
    • “உங்களை நேசிக்கிறோம்…” – ரஜினிக்கு லோகேஷ் கனகராஜ் வாழ்த்து
    • மூடப்பட்ட 207 அரசுப் பள்ளிகளை திறக்க வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

    Recent Comments

    No comments to show.

    Archives

    • August 2025
    • July 2025
    • June 2025
    • May 2025
    • April 2025

    Categories

    • அறிவியல்
    • ஆன்மீகம்
    • உலகம்
    • கல்வி
    • சினிமா
    • தேசியம்
    • தொழில்நுட்பம்
    • மாநிலம்
    • லைஃப்ஸ்டைல்
    • வணிகம்
    • விளையாட்டு
    © 2025 India Vaani
    • Home

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.