மூலவர்: சுப்பிரமணிய சுவாமி அம்பாள்: வள்ளி-தெய்வானை தல வரலாறு : தவம் புரிந்து கொண்டிருந்த விஸ்வாமித்திரரின் முன் தோன்றிய சிவபெருமான், பாலதிரிபுரசுந்தரியை எண்ணி தவம் புரிந்தால் பிரம்மரிஷி பட்டம் பெறுவதற்கான வழிமுறைகளை கூறுவாள் என்று அருளினார். விஸ்வாமித்திரர் தேவியை நோக்கி தவம் புரிந்தார். அவர் முன்பு தோன்றிய தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது நெற்றியில், விஸ்வாமித்திரர் திலகமிட்டார். குங்குமத்தை சரிபார்க்க குளத்து நீரில் தன் பிம்பத்தை தேவி பார்த்தபோது, குங்குமம் நீரில் விழுந்தன அடுத்த நொடி அந்த குளத்தில் இருந்து தெய்வீக ஒளி தோன்றியது. மேலும் 3 முகங்கள் தோன்றின. அனைத்தையும் இணைத்து, 4 முகங்களுடன் கூடிய திருஉருவம் தோன்றி திரிபுரசுந்தரியை வணங்க, சதுர்முக முருகனை அணைத்துக் கொண்டாள் தேவி. மேலும் இந்த முருகனே வேண்டும் வரம் அருள்வான் என்று விஸ்வாமித்திரரிடம் கூறினாள் தேவி.
ஆடு மேய்க்கும் சிறுவன், முருகன் கோயிலுக்கு வழி காட்டினான், அங்கு விஸ்வாமித்திரருக்கு, பாலதிரிபுர சுந்தரியும்சதுர்முக முருகனும் காட்சி அருளினர். தனது ஆணவம் அழியப்பெற்றதாக உணர்ந்தார் விஸ்வாமித்திரர், அப்போது அங்கு வந்தவசிஷ்டர், விஸ்வாமித்திரருக்கு பிரம்மரிஷி பட்டம் அருளினார்.
கோயில் சிறப்பு: வலது கரத்தில் சங்கு முத்திரை, இடது கரத்தில் சக்கர முத்திரை, மார்பில், கவுரி சங்கரர் ருத்ராட்சம் சூடி முருகன் அருள்பாலிக்கிறார். சதுர்முகனுக்கு பாலில் குங்குமம் கலந்து அபிஷேகம் செய்தால் திருமணத் தடை, செவ்வாய் தோஷம் நீங்கும் என்பது ஐதீகம். சிறப்பு அம்சம்: திண்டு திண்டாக கல்மழை பெய்த தலம். ஆடு மேய்க்கும் சிறுவனாக வந்து முருகன் கோயிலுக்கு வழிகாட்டிய படியால் அவனது கோயில் இருக்கும் இடம் சின்னான் பட்டி (சின்னாளப்பட்டி) என்று அழைக்கப்படுகிறது. அமைவிடம்: திண்டுக்கல்லில் இருந்து 11 கிமீ தொலைவில், மதுரை செல்லும் வழியில் உள்ளது. கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7-11, மாலை 5-8.30 வரை.