அகமதாபாத்: அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஏர் இந்தியாவின் தாய் நிறுவனமான டாடா குழுமம் ரூ.1 கோடி நிதியுதவி அளிக்கும். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்று அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியாவின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிரப்பட்ட வீடியோ பதிவில், “இந்த சம்பவத்தில் விமானத்தில் பயணித்த 241 பயணிகள் உயிரிழந்ததை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம். மேலும், இந்த இழப்பால் மிகவும் துயரமடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் மற்றும் அவர்களின் அன்புக்குரியவர்களுக்காக பிரார்த்திக்கின்றோம்.
எங்கள் தாய் நிறுவனமான டாடா குழுமம், உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும் தலா ஒரு கோடி ரூபாய் அல்லது தோராயமாக 85,000 பிரிட்டிஷ் பவுண்டுகளை வழங்குவதாகவும், காயமடைந்தவர்களின் மருத்துவச் செலவுகளை ஏற்றுக் கொள்வதாகவும் தெரிவித்துள்ளது. தொழில்நுட்பக் குழு இப்போது சம்பவ இடத்தில் உதவி செய்து வருகிறது.
விபத்தில் காயமடைந்த மருத்துவ மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டுள்ளோம். இந்த கடினமான காலங்களில் ஏர் இந்தியா முழுமையான மற்றும் தடையற்ற உதவியை வழங்க உறுதிபூண்டுள்ளது. நான் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டேன். அந்தக் கோரக் காட்சிகளை கண்டு மிகவும் வேதனையுற்றேன். அரசு அதிகாரிகளை சந்தித்தேன். களத்தில் பணிபுரிபவர்களுடனும், விசாரணைக் குழுவுக்கும் முழு ஒத்துழைப்பு தருவோம் என தெரிவித்தேன்.
முழு விசாரணைக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும் என்பதை நாங்கள் அறிவோம், இதனால் நாங்கள் வெளிப்படைத்தன்மையுடன் இருப்போம். எங்கள் மீது வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கும் ஏர் இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் தொடர்ந்து செய்யும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்,