சென்னை: ரூ.1,018 கோடியில் ரூ.19 மாவட்டங்களில் 25 இடங்களில் கட்டப்பட்டு வரும் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளை முதல்வர் விரைவில் திறந்து வைக்கவுள்ளார் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் நேற்று நடந்த மகப்பேறு மயக்கவியல் தர மேம்பாட்டிற்கான மருத்துவ பயிலரங்கத்தை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, மயக்கவியல் துறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவர்களுக்கு விருதுகள் வழங்கினார்.
சுகாதாரத்துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவம் மற்றும் ஊரகநலப்பணிகள் இயக்குநர் ராஜமூர்த்தி, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி கூடுதல் இயக்குநர் தேரணிராஜன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
பின்னர், அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: மகப்பேறு காலங்களில் தாய்மார்கள் மரணங்களை குறைக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்படுகிறது. ஒரு லட்சம் பிறப்புகளுக்கு தாய்மார்களின் இறப்பு விகிதம் 39.6 ஆகவும், குழந்தை மரண விகிதம் 1,000 பிறப்புகளுக்கு 7.4 ஆகவும் குறைந்துள்ளது. மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் சிசு இறப்பு மரண விகிதங்களை மேலும் குறைக்க மருத்துவர்களுக்கான பயிலரங்கங்கள், அவர்களுக்கான சிறப்பு வகுப்புகள் ஏற்கெனவே நடத்தப்பட்டது.
அதேபோல் குழந்தைகள் நல மருத்துவர்களுக்கான தனியாக பயிலரங்கள் பல்வேறு அமர்வுகளின் மூலம் நடத்தப்பட்டது. தொடர்ந்து இன்றைக்கு மகப்பேறு மருத்துவத்துக்கு மிகப்பெரிய தொடர்புடைய மயக்கவியல் துறையில் 129 மருத்துவர்கள் பங்கேற்றிருக்கின்ற பயிலரங்கம் தற்போது நடக்கிறது. அடுத்தடுத்த ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதமும், குழந்தைகளுக்கான இறப்பு விகிதமும் வெகுவாக குறைந்து பூஜ்ஜிய நிலைக்கு செல்லும் என்று கருதுகிறோம்.
கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு மருத்துவ கட்டமைப்புகள் தொடர்ந்து தொடங்கி வைக்கப்பட்டு வருகிறது. ஒரே ஆண்டில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை தொடங்கி வைத்தார். அம்மருத்துவமனைகளால் மக்கள் பயன் பெற்று வருகிறார்கள். 208 மருத்துவமனைகளுக்கு பல்வேறு மாவட்டங்களில் இடப்பற்றாக்குறை, இடம் கண்டறிவதில் ஏற்பட்ட காலதாமத்தினால் அந்த பணிகளும் முடிவுற்று 208 மருத்துவமனைகள் தற்போது திறக்கும் நிலையில் உள்ளது.
அதற்கான மருத்துவ பணியாளர்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள மாவட்ட சுகாதார நலவாழ்வு சங்கம் மூலமாக நிரப்பப்பட்டு வருகிறது. 50 இடங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக அறிவித்து, அதற்கும் பணியாளர்களை நியமிக்கும் பணிகள் இன்னும் 10 நாட்களுக்குள் முடிவுறும் நிலையில் இருக்கிறது.
இப்பணிகள் முடிவடைந்தவுடன் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் மற்றும் 50 புதிய ஆரம்ப சுகாதார நிலையங்களையும் முதல்வர் பயன்பாட்டிற்காக கொண்டு வருவார். தமிழகத்தில் ரூ.1,018 கோடியில் 19 மாவட்டங்களில் 25 இடங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைகள் கட்டும் பணிகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இம்மருத்துவமனைகளும் விரைவில் முதல்வரால் திறந்து வைக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.