சென்னை: சென்னை கானத்தூர் அருகே கடல் அரிப்பால் தவித்து வரும் மீனவர்கள் அறிவித்தபடி தூண்டில் வளைவு அமைத்துதர வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னையை அடுத்தகானத் தூர் ரெட்டிக்குப்பம் மீனவப்பகுதியில் சுமார் ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றன. அங்குக் கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்கள் படகை நிறுத்தி வைக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதனால் மண் அரிப்பைத் தடுக்க ரூ.19 கோடி மதிப்பில் தூண்டில் வளைவு அமைத்து தரப்படும் என கடந்த ஆண்டு தமிழக அரசு அறிவித்தது. ஆனால், இதுவரை திட்டம் செயல்பாட்டுக்கு வர வில்லை. இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி தூண்டில் வளைவு அமைத்துதர வலியுறுத்தி அந்தப் பகுதி கானத்தூர் பேருந்து நிலையம் அருகே நேற்று ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்.
போராட்டக்குழுவினர் கூறும்போது, ‘‘கடந்த சில ஆண்டுகளாக கடல் அரிப்பால் அங்கிருந்த மதில் சுவர்கள் இடிந்து விழுந்துவிட்டன. மேலும், அருகே இருக்கும் மழைநீர் வடிகால்வாயும் இடிந்து சேத மடைந்து காணப்படுகிறது. இதுதவிர கடற்கரையில் படகுகளை நிறுத்தி வைக்க முடியாததால் எங்கள் வாழ்வாதாரம் மிகவும்பாதிக்கப்பட்டுள்ளது.
இதை சரிசெய்ய ரூ.19 கோடியில் தூண்டில் வளைவு அமைத்து தரப்படும் என்று சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒன்றரை ஆண்டாகியும் திட்டத்துக்கான ஆயத்தப் பணிகள்கூட தொடங்கப்படவில்லை. இதன்பின்னும் நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’’என்றனர். கானத்தூர் ரெட்டி குப்பத்தை சேர்ந்த இரா.ஐயப்பன் கூறும்போது, ‘‘தூண்டில் வளைவு திட்டத்தை கானத்தூர் ரெட்டி குப்பம் கடல் பகுதியில் அமைக்க வலியுறுத்தி ஒரு நாள் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.
அரசின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட துணை ஆட்சியர் மற்றும் திருப்போரூர் வட்டாட்சியர் வந்து மக்களுடன் பேசி, உடனடியாக சிறப்பு திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்று வாக்குறுதி அளித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப் பட்டது’’ என்றார்.