சென்னை: பல நூற்றாண்டுகள் போராடி வெளிக்கொண்டுவந்த வரலாற்றை மறைத்து ஒழிக்க பாஜக அரசு முயல்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.
கீழடி அகழாய்வு தொடர்பாக இன்னும் அறிவியல்பூர்வமான சான்றுகள் தேவை என்று, சமீபத்தில் சென்னை வந்த மத்திய கலாச்சாரத் துறை அமைச்சர், கஜேந்திர செகாவத் தெரிவித்தார். இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது:
கீழடி அகழாய்வில் இருந்து உலக அளவிலான ஆய்வகங்களுக்கு அனுப்பி, கரிமப் பகுப்பாய்வில் காலக்கணக்கீடு செய்யப்பட்ட மாதிரிகள், ‘ஏஎம்எஸ்’ அறிக்கைகளை அளித்த பின்னரும் மேலும் சான்றுகள் தேவை என்கிறார்கள்.
இதற்கு நேர்மாறாக, மதிப்புமிக்க வரலாற்றாய்வாளர்கள், தொல்லியல் அறிஞர்கள் கடுமையாக எதிர்க்கும் நிலையிலும் கற்பனையான சரஸ்வதி நதி நாகரிகத்தை பாஜக ஆதரிக்கிறது. எந்த நம்பத்தகுந்த சான்றும் இல்லாமல் இதனை அவர்கள் முன்னெடுக்கிறார்கள்.
ஆனால் நாம் கடுமையான பரிசோதனைகள் மூலம் நிறுவியுள்ள தமிழ்ப் பண்பாட்டின் தொன்மையைப் புறந்தள்ளுகிறார்கள். கீழடி மற்றும் தமிழ் மரபுசார் உண்மையைப் பொறுத்தவரை பாஜக – ஆர்எஸ்எஸ் கும்பல் கதறுவது சான்றுகள் இல்லை என்பதற்காக அல்ல. கீழடி காட்டும் உண்மை அவர்கள் முன்னெடுக்கும் ‘ஸ்க்ரிப்ட்’-க்கு எதிரானதாக இருப்பதால்தான்.
எங்கள் வரலாற்றை வெளிக்கொணர பல நூற்றாண்டுகள் போராடினோம். அதனை எப்படியாவது மறைத்து அழிக்க ஒவ்வொரு நாளும் அவர்கள் முயல்கிறார்கள். எல்லாவற்றையும் உலகம் உற்றுநோக்கிக் கொண்டுதான் இருக்கிறது. காலமும் கூட. இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.