சென்னை: விவசாயிகளின் கஷ்டத்தை அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின் என்று அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈரோடு மாவட்டம், பெருந்துறை அருகே கடந்த ஜூன் 11-ம் தேதி நடைபெற்ற அரசு விவசாய கண்காட்சி விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி உள்ளதாக பட்டியலிட்டுள்ளார். மேலும், என்னைப் பற்றியும் பேசியுள்ளார்.
மீத்தேன்-ஹைட்ரோ கார்பன் ஆய்வுத் திட்டங்களுக்கு கையெழுத்திட்டு, அனுமதி வழங்கி டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்க திமுக மேற்கொண்ட முயற்சியினைத் தடுத்து நிறுத்தி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, டெல்டா விவசாயிகளின் வயிற்றில் பாலை வார்த்தது எனது தலைமையிலான ஜெயலலிதாவின் அரசு. அவரது அரசில் காவிரி மேலாண்மை ஆணையம், நீர் முறைப்படுத்தும் குழு அமைக்கப்பட்டு காவிரியில் நமது உரிமை பாதுகாக்கப்பட்டது.
அத்திக்கடவு–அவினாசி திட்டம் சுமார் 80 சதவீத பணிகள் முடிந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, சுமார் 35 மாத தாமதத்துக்கு பிறகு, நாங்கள் கொண்டு வந்த திட்டத்தை திறந்த போலி விவசாயி ஸ்டாலின், விவசாய கண்காட்சி விழாவில் மேற்கு மண்டல மக்களின் நீண்ட நாள் கனவு நனவாகி உள்ளதாக நாடக வசனம் பேசியுள்ளார். இத்திட்டத்தை மாநில நிதியிலேயே நிறைவேற்றியது எனது தலைமையிலான அரசு என்பதை மேற்கு மண்டல மக்கள் நன்கு அறிவர். திமுக அரசு அத்திக்கடவு-அவினாசி திட்டத்தின் 2-ம் கட்டத்தை கிடப்பில் போட்டுள்ளதை மக்கள் அறிவார்கள்.
மேட்டூரில் காவிரியின் உபரி நீர், நீரேற்றுப் பாசனம் மூலம் நீரேற்றப்பட்டு, கால்வாய்கள் மூலம் வறண்ட 100 ஏரிகளுக்கு நீர் நிரப்பப்பட்டு, பிறகு சரபங்கா நதியில் கலக்கும் இத்திட்டத்தின் பணிகள் எங்கள் ஆட்சியில் சுமார் 75 சதவீதம் முடிவடைந்த நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு, சுமார் 50 மாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்னும் முழுமை பெறவில்லை.
தலைவாசலில் கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் சாலையில் கோட் ஷூட் அணிந்து நடந்து சென்ற போலி விவசாயி நான் அல்ல. பிறந்தது முதல் இன்றுவரை எனது குடும்பம் விவசாயக் குடும்பம், நான் இன்றும் விவசாயப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். விவசாயிகளின் கஷ்டங்களை முழுமையாக அறிந்தவன். விவசாயத்தைப் பற்றி ஒன்றும் தெரியாத, விவசாயிகளின் கஷ்டத்தையும், வியர்வையையும், வேதனையும் அறியாத ஒரே முதல்வர் ஸ்டாலின் மட்டுமே. `நான் உண்மையான விவசாயியா? நீங்கள் உண்மையான விவசாயியா?’ நீங்கள்தான் போலி விவசாயி என்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, எனக்கு சான்றிதழ் அளிக்கும் தகுதி ஸ்டாலினுக்கு இல்லை.
தமிழக மக்கள் 2026 சட்டப்பேரவை தேர்தலின்போது யார் உண்மையான விவசாயி என்பதை சீர்தூக்கிப் பார்த்து, மக்கள் விரோத திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் போது, தமிழக மக்களின் எதிர்ப்பு என்ன என்பது உங்களுக்கு தெரியும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.