எடப்பாடி அருகே சிறுவனை வளர்ப்பு நாய்கள் விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
எடப்பாடி கவுண்டம்பட்டியில் வீட்டில் வளர்க்கும் நாய்கள் வெறிபிடித்து வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி கடித்துள்ளன. இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் எடப்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், குழந்தைகளை விரட்டி கடிக்கும் நாய்களை வீட்டில் கட்டிப் போட்டு வளர்க்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தினர். இந்நிலையில் நாய்களை கட்டிப் போட்டு வளர்க்காததால் வீதியில் செல்லும் குழந்தைகளை விரட்டி விரட்டி நாய்கள் கடித்துள்ளன.
இது குறித்து உரிமையாளரிடம் அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் கேட்டதற்கு, ஆறுமுகத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்பட்ட ஆறுமுகம் எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து போலீஸார், நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, சிறுவன் ஒருவரை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் சிசிடிவி காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.