கடலூர் பேருந்து நிலையத்தில், முதல்வர் திறந்து வைத்த சிறப்பு நூலகம் மறுநாளே வெறிச்சோடி கிடக்கிறது. அங்கு அரசால் வைக்கப்பட்ட நூலகத்துக்கான அறிவிப்பு மட்டுமே காட்சிப் பொருளாக இருக்கிறது.
‘மக்கள் அதிகம் கூடும் இடங்களில் நேரத்தை பயனுள்ளதாக பயன்படுத்தும் வகையில் சிறப்பு நூலகங்கள் அமைக்கப்படும்’ என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அறிவித்தபடியே மாவட்ட அரசு மருத்துவ மனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள் என தமிழகத்தில் பொதுமக்கள் கூடும் 70 இடங்களைத் தேர்வு செய்து, இந்த சிறப்பு நூலகங்களை காணொலி வழியாக நேற்று முன்தினம் முதல்வர் திறந்து வைத்தாா்.
அதில் ஒன்று கடலூர் பேருந்து நிலையத்திலும் திறந்து வைக்கப்பட்டது. ‘பயணிகளின் காத்திருக்கும் அறையில் நேரத்தை பயனுள்ளதாக கழிக்க இந்த நூலகம் உதவி செய்யும்’ என்று மாவட்ட நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர் கோ. ஐயப்பன், மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா ஆகியோர் இணைந்து பங்கேற்று, புத்தகங்களை வாசித்து தொடங்கி வைத்தனர்.
இந்த நூலகத்தில் முதல்நாளில் 200-க்கும் குறைவான புத்தகங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன. புத்தகங்கள் வைப்பதற்கான அலமாரிகள் இல்லாமலும் நூலகத்துக்கு கதவுகள் இல்லாமலும் இருந்தன. ஆனாலும் இந்த சிறப்பு நூலகம் முதல் நாளிலேயே பயணிகளிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. முதல் நாளில் திறப்பு விழா நிகழ்வு முடிந்த பிறகும் வாசிப்பாளர்கள் சிலர் ஆர்வத்துடன் வந்து புத்தகங்களை வாசித்தனர்.
இந்த நிலையில் நேற்று காலையில் இந்த சிறப்பு நூலகம் வெறிச்சோடியது. பயணிகள் சென்று பார்த்த போது நூலகம் ஒன்று இருந்ததற்கான அறிகுறி ஏதும் இல்லை. திறப்பு விழாவின் போது மாவட்ட நிர்வாகத்தால் அமைக்கப்பட்ட பேனர் மட்டும் சுவற்றில் இருந்தது.
‘ஒரே நாளில் சிறப்பு நூலகத்தின் நிலை’ என குறிப்பிட்டு வலை தளங்களில் வீடியோக்கள் பரவ, உடனே நேற்று மதியம் அவசர அவசரமாக ஒரு மாவட்ட நூலகத்துறை சார்பில் ஒரு புத்தக அலமாரி கொண்டு வந்து வைக்கப்பட்டு, அதில் சில புத்தகங்கள் வைக்கப்பட்டன. இருக்கைகளும் போடப்பட்டன.
இதுபற்றி விசாரித்த போது, “இந்த சிறப்பு நூலகத்தையும் மாவட்ட நூலகத் துறைதான் கவனிக்க வேண்டும். இதற்கு முறையாக ‘பகுதி நேர நூலகர்’ என்ற நிலையிலாவது ஒருவரை நியமிக்க வேண்டும். சுற்றிலும் அடைப்புகளை ஏற்படுத்தி, கதவு போட வேண்டும். இது மிகமிக அடிப்படையானது. இதைச் செய்யாமல் இந்த சிறப்பு நூலகத்தை திறந்ததால் மறுநாளே இயங்க இயலாத சூழல் ஏற்பட்டிருக்கிறது” என்று தெரிவித்தனர்.
“இந்த பேருந்து நிலைய நூலகத்தை நல்ல முறையில் பராமரிப்பு செய்து, தொடர்ந்து இயங்கிட வேண்டும். இதன்மூலம் பேருந்து ஏற வந்து செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பயணிகளிடையே வாசிப்பு திறன் மேம்படும்” என்று வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் தெரிவிக்கின்றனர்.
விரைவில், இதற்கான நூலகர் நியமிக்கப்பட்டு, சுழற்சி முறையில் நடமாடும் வாகனம் நூலகம் மூலம் அவ்வப்போது புத்தகங்களை மாற்றி, சிறந்த முறையில் இயக்க ஏற்பாடு செய்து வருகிறோம் என்று மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கின்றனர்.
சிறப்பு நூலகம் நல்ல முறையில் இயங்கினால், தரமான புத்தகங்களைத் இலவசமாக மாவட்ட நூலகத் துறைக்கு தர கடலூர் மாநகரில் எண்ணற்ற புரவலர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.