கோவை: “மாணவர்களின் திறமையைக் கண்டறிவதில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் கூட்டு பொறுப்பு உண்டு,” என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
கோவை சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு தொடக்க விழா இன்று (ஜூன் 12) நடைபெற்றது. இதில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யமொழி பேசியதாவது: “பெற்றோர்கள் தயவு செய்து நம் மாணவர்களை இதர மாணவர்களோடு ஒப்பிட்டு பார்க்க வேண்டாம். பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் வாங்கும் மாணவர்களை காட்டிலும், தேர்வில் சாதாரண தேர்ச்சி அடைந்தவர்களின் திறமை கண்ணுக்கு தெரியாமல் போய்விடும்.
எனவே, மாணவர்களின் திறமையைக் கண்டறிவதில் ஆசிரியர்களுக்கும், பெற்றோருக்கும் கூட்டு பொறுப்பு உண்டு என்பதைக் கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு திறமையைக் கண்டறிந்து ஊக்கத்தைக் கொடுக்க வேண்டும். காந்தி சொல்வது போல, பள்ளி என்பது மிகப் பெரிய தொழிற்சாலை. நாம் எதை உருவாக்குகிறோம் என்றால், பள்ளி உயர்ந்த நல்ல பண்புள்ள மனிதர்களை உருவாக்குகிறோம்.
மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்கள் மட்டும் மதிப்பீடு செய்யாது. ஒவ்வொருவரும் தனித்துவ திறமையை வளர்த்து கொள்ள வேண்டும் என்ற ஆசையோடு இருங்கள். மாணவர்கள் தாங்கள் படிக்கும் காலத்தில் நல்லவர்களாக இருந்தார்கள் என்பது தான் நீங்கள் உங்கள் ஆசிரியர்களுக்கு தரும் நல்லாசிரியர் விருதாக இருக்க முடியும். நாடு முழுவதும் ஒட்டுமொத்தமாக 25 கோடி பேர் பள்ளியில் படிக்கின்றனர். ஆனால் மத்திய அரசு ரூ.78 ஆயிரம் கோடி தான் ஒதுக்குகிறது. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையில் 65 லட்சம் மாணவர்களுக்கு ரூ.47 ஆயிரம் கோடி நிதி ஒதுக்குகிறது.
பள்ளிக் கல்விக்கு மாநில அரசு தரும் முக்கியத்துவத்தை தருகிறோம் என்பதை உணர வேண்டும். பள்ளி கல்விக்கு முதலீடு செய்யும் நிதி என்பதை நாங்கள் நல்ல சமுதாயம் என்ற வட்டியோடு திருப்பி தருகிறோம். வாசிப்பு பழக்கத்தை மாணவர்கள் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். உலக அறிவை பெருக்கி கொள்ள வேண்டும். அறிவுசார்ந்த சமுதாயத்தை அரசு உருவாக்கி வருகிறது,” என்று அவர் பேசினார்.
நூற்றாண்டு விழா குழு தலைவரும், நடிகருமான சிவகுமார் பேசியதாவது: “நான் சூலூர் பள்ளியில் படிக்கும்போது ஆசிரியர்கள் திருவேங்கிடசாமியிடம் இருந்து மனப்பாடம் செய்வதையும், ரத்தினவேலிடம் இருந்து ஓவியத் திறமையையும் கற்றுக் கொண்டேன். எனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்கள்,” என்றார்.
நடிகர் கார்த்தி பேசும்போது, “என் தந்தை நடிகர் சிவகுமார் கல்வி ஒழுக்கம் மூலம் வாழ்க்கையில் சாதித்து காட்டியவர். அரசு பள்ளிகளில் 65 லட்சம் பேர் படிக்கின்றனர். தமிழகத்தில் பள்ளிக் கல்வியைப் பொறுத்தவரை கிராமப்புற மாணவர்களின் ஒரே நம்பிக்கையாக இருப்பது அரசு பள்ளிகள் தான்,” என்றார்.
சூலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் நூற்றாண்டு விழா குழுவுக்கு நடிகர் கார்த்தி ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தார். அதேபோல பல்வேறு தொழில்முனைவோர் உள்ளிட்டோர் முன்னாள் மாணவர் அறக்கட்டளைக்கு நிதியுதவி அளித்தனர். சூலூர் வட்டார பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் பிளஸ் 2, 10-ம் வகுப்பு பொது தேர்வுகளில் சிறப்பிடம் பிடித்த 35-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு ரூ.1.10 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.
நிகழ்வில் முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, நூற்றாண்டு விழா குழு ஒருங்கிணைப்பாளர் நடராஜன், எம்பி ஈஸ்வரசாமி, தைரோகேர் நிறுவனர் வேலுமணி, சூலூர் பேரூராட்சி தலைவர் தேவி மன்னவன், விழா குழு செயலாளர் மன்னவன், கல்வி ஆர்வலர் தளபதி முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலர் பாலமுரளி, தலைமை ஆசிரியர் ஜெயசீலி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.