திண்டுக்கல்: “திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு,” என்று அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியுள்ளார்.
திண்டுக்கல் அருகே ஆத்தூர் தொகுதிக்குட்பட்ட சீவல்சரகு கிராமத்தில் ‘கலைஞரின் கனவு இல்ல’ திட்ட பயனாளிகளுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 12) நடைபெற்றது. பயனாளிகள் 431 பேருக்கு வீடுகள் கட்டுவதற்கான பணி உத்தரவை வழங்கி அமைச்சர் ஐ.பெரியசாமி பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ஐ.பெரியசாமி கூறியது: “திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் அதிக இடங்கள் வேண்டும் என கேட்பது அவர்களது உரிமை. கம்யூனிஸ்ட் கட்சியினர் போர்க்கொடி தூக்கவில்லை, மிரட்டவில்லை அவர்களின் உரிமையை கேட்கின்றனர்.
தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கூட்டணி மிக சிறப்பாக உள்ளது. மக்களுக்கான கூட்டணி இது. இதில் எந்த பிரச்சினையும் இல்லை. திமுக கூட்டணியில் இருந்து கட்சிகள் விலகும் என்பது பகல் கனவு. யாரும் போக மாட்டார்கள். தண்ணீர் இல்லா பாறை கிணற்றில் எப்படி விழுவார்கள்? தண்ணீர் இருந்தால் குதிக்கலாம் தண்ணீர் இல்லாமல் எப்படி குதிக்க முடியும்? எல்லாவற்றிலும் முதன்மையான அரசாக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் உயர்ந்துள்ளது. ஆட்சியில் யாரும் இதுவரை பங்கு கேட்டது இல்லை.
கடந்த ஆறுமுறை ஆட்சிக்கு வந்துள்ளோம். ஏழாவது முறையாகவும் திமுக ஆட்சிதான். இதுவரை ஆட்சியில் யாரும் பங்கு கேட்டது இல்லை. அதற்கான சூழ்நிலையும் இல்லை. தற்போது, சூழ்நிலை நன்றாக உள்ளது. தமிழகத்தில் 234 தொகுதிகளில் 200 தொகுதிகளில் திமுக கூட்டணிதான் வெற்றி பெறப் போகிறது. கூட்டணிகள் அதிகப்படியான இடங்கள் கேட்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவு எடுப்பர். எந்தக் கட்சியும் திமுவை விட்டு விலகிச் செல்லாது,” என்று அவர் கூறினார். இந்நிகழ்வில், திண்டுக்கல் ஆட்சியர் செ.சரவணன் தலைமை வகித்தார். திண்டுக்கல் எம்.பி., ஆர்.சச்சிதானந்தம், உதவி ஆட்சியர்(பயிற்சி) வினோதினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.