புதுடெல்லி: ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திராவில் ரூ.6,405 கோடி மதிப்பிலான 2 ரயில்வே திட்டங்களை செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நாட்டில் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்த ரூ.6,405 கோடி மதிப்பிலான 2 திட்டங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது. ஜார்க்கண்ட், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் செயல்படுத்தப்படவுள்ள இந்த திட்டத்தின் மூலம் 318 கி.மீ. தூரத்துக்கு ரயில் பாதைகளின் நீளம் விரிவடையும்.
ஜார்க்கண்டின் கோடெர்மா மற்றும் பார்ககானா இடையில் 133 கி.மீ. தூரத்துக்கும் கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் (பெல்லாரி – சிக்ஜாஜுர்) 185 கி.மீ. தூரத்துக்கும் ரயில் பாதை அமைக்கப்படும். 7 மாவட்டங்களைச் சேர்ந்த 1,408 கிராமங்களின் 28.19 லட்சம் மக்கள் பயனடைவார்கள்.
இந்த இரு திட்டங்களும் பயணிகள் போக்குவரத்து மற்றும் சரக்கு போக்குவரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த திட்டங்கள் 3 ஆண்டுகளில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.