பாட்னா: பிஹார் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் நேற்று தனது 78-வது பிறந்த நாளை பாட்னாவில் உள்ள தனது இல்லத்தில் கொண்டாடினார். அப்போது முற்றிலும் லட்டுகளால் தயாரான 78 கிலோ கேக்கை அவர் வாளால் வெட்டினார்.
இது தொடர்பான வீடியோ நேற்று சமூக வலைதளங்களில் வைரலானது. அதில் ‘லாலு யாதவ் ஜிந்தாபாத்’ என்ற வாழ்த்து முழக்கத்துக்கு மத்தியில் அவர் மிகப் பெரிய கேக்கை வாளால் வெட்டுவதை காண முடிகிறது.
லாலுவுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று வாழ்த்து தெரிவித்தார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில், “எங்களுக்கு இடையிலான பிணைப்பு எப்போதும் அரசியலுடன் மட்டுமே தொடர்புடையது அல்ல. அது ஒரு ஆழமான மனிதநேய தொடர்பில் இருந்து வருகிறது. பகிர்ந்து கொள்ளப்பட்ட விழுமியங்கள் மற்றும் சமூக நீதிக்கான போராட்டத்தில் அது வேரூன்றியுள்ளது” என்று கூறியுள்ளார்.
மேலும், லாலு தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைகளை எதிர்கொண்டபோதும், சமூகத்தின் பலவீனமான பிரிவினருக்காக வலுவாக நின்றதாக ராகுல் பாராட்டியுள்ளார். லாலுவுக்கு நல்ல ஆரோக்கியமும் நீண்ட ஆயுளும் கிடைக்க வாழ்த்தி பதிவை முடித்துள்ளார்.
சமீபத்தில் கட்சியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்ட லாலுவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவும் தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சுவரில் வரையப்பட்ட லாலுவின் ஓவியத்தை தழுவி நிற்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில் “இரவு இருளாக இருந்தால், காலை நெருங்கி வரும்” என்று அவர் கூறியுள்ளார். லாலுவின் பிறந்த நாளையொட்டி பாட்னாவில் அவரது வீட்டில் நேற்று கட்சித் தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டிருந்தனர்.