பெங்களூரு: கர்நாடக காங்கிரஸ் எம்.பி., 3 எம்எல்ஏ.க்கள் வீடுகளில் அமலாக்க துறை சோதனை நடத்தியது. கர்நாடகாவில் வால்மீகி பழங்குடியினர் வளர்ச்சி ஆணையத்தில் ரூ.187.3 கோடி ஊழல் நடந்ததாக அதன் கண்காணிப்பாளர் சந்திரசேகரன் கடந்த மே மாதம் குற்றம்சாட்டினார்.
இதற்கு உடந்தையாக இல்லாததால் தனக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக, ஆணையத்தின் நிர்வாக இயக்குநர் ஜி.பத்மநபா உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்தனர். முன்னாள் அமைச்சர் நாகேந்திரா உள்ளிட்டோரின் வீடுகளில் சோதனை நடத்தினர். மேலும் நாகேந்திராவை கைது செய்து, விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் அமலாக்கத் துறை அதிகாரிகள் பெல்லாரி காங்கிரஸ் எம்.பி. துக்கா ராம், காங்கிரஸ் எம்எல்ஏ.க்கள் நரா பாரத் ரெட்டி, நாகேந்திரா, ஜி.என்.கணேஷ் ஆகியோரின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.