விருதுநகர்: காரியாபட்டி அருகே பட்டாசு ஆலையில் நேற்று காலை நேரிட்ட வெடி விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர். மதுரையைச் சேர்ந்த ராஜசந்திர சேகரன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு ஆலை விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகேயுள்ளவடகரை கிராமத்தில் உள்ளது. இங்கு 30-க்கும் மேற்பட்ட அறைகளில் பேன்ஸி ரக பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை ஓர் அறையில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. இதில், அந்தக் கட்டிடம் முழுவதும் இடிந்து தரைமட்டமானது. அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் கல்குறிச்சி சவுடம்மாள் (53), தண்டியனேந்தல் கருப்பையா (35) ஆகியோர் அந்த இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், முருகன் (45), பேச்சியம்மாள் (43), கணேசன் (43), மாரியம்மாள் (40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். உயிரிழந்த 2 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு, பிரேதப் பரிசோதனைக்காக விருது நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கணேசன், சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். காயமடைந்த மற்ற 3 பேருக்கும் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து நேரிட்ட பட்டாசு ஆலையின் உரிமம் உனடியாக ரத்து செய்யப்பட்டது. விபத்து தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஆலை மேலாளர் கல்குறிச்சி வீரசேகரன் (53), போர்மேன் கனிமுருகன் (23) ஆகியோரைக் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.
அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு கூறும்போது, “பட்டாசு ஆலை விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும்” என்றார்.
ரூ.4 லட்சம் நிவாரணம்
இதற்கிடையே, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், பலத்த காயமடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சம், லேசான காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க உத்தரவிட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளார்.
தொடர் கண்காணிப்பு தேவை
இந்நிலையில், பட்டாசு ஆலைகளில் விபத்தைத் தடுக்கும் வகையில், தொடர் கண்காணிப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.