சென்னை: சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூடுதல் இடங்களை விட்டுக்கொடுப்பது பயனுள்ளதாக இருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
இதுதொடர்பாக நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது: மத்திய பாஜக அரசு மதவெறி அரசியலையும் கடைப்பிடிக்கிறது. இந்த ஆட்சிக்கு எதிராக மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒன்றுசேர வேண்டும் என்பது வரலாற்றுக் கட்டாயம். தமிழகத்தில் திமுக, மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைத்து முக்கியமான பாத்திரத்தை வகித்து வருகிறது.
அதிமுக – பாஜக சந்தர்ப்பவாத கூட்டணி அமைந்துள்ள நிலையில், அந்த கூட்டணி தமிழகத்தில் வேரூன்றிட முடியாது. எந்த வகையிலும் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிவிடக் கூடாது. தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலை தற்போது இல்லை. பாஜக வலுவடைந்துள்ளது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் பாஜக தனது அரசியல் சுயலாபத்துக்காக அதனை பயன்படுத்தி கொள்ளும் சதியில் ஈடுபட்டுள்ளது.
அதிமுக மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்போதும் சுதாரித்துக் கொள்ளவில்லை என்றால், சில ஆண்டுகளுக்கு பிறகு அதிமுக என்ற கட்சி பெயர் மட்டுமே இருக்கும். பல மாநிலங்களில் பல மாநிலக் கட்சிகளை அழித்ததுதான் பாஜகவின் உண்மை வரலாறு.
தந்தையும் மகனும் ஒற்றுமையாக ஒரே பாமகவாக பாஜக அணியில் சேர வேண்டும் என்ற அரசியல் நோக்கத்துடன்தான் குருமூர்த்தி, சைதை துரைசாமி சமரச முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தேமுதிக அதிமுக – பாஜக கூட்டணியோடு செல்வதற்கான வாய்ப்புதான் அதிகம். அப்படி போனாலும் அது ஒரு வலுவான அணியாக இருக்காது.
கடந்த 2021-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் கூடுதல் தொகுதிகளை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டது. அன்றைய சூழ்நிலையில் அதிமுக – பாஜக கூட்டணி எந்த நிலையிலும் வெற்றிபெற்றுவிட கூடாது என்ற கொள்கையின் அடிப்படையில் திமுக ஒதுக்கிய குறைந்த தொகுதிகளை ஏற்றுக்கொண்டோம். அத்தகைய அணுகுமுறை இந்த தேர்தலில் தொடரக்கூடாது. விட்டுக்கொடுப்பது திமுக தலைமைக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் இருப்பதால், கடந்த தேர்தலின்போது மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை திமுக அரசு மேலும் நிறைவேற்ற வேண்டும். இதன்மூலம் அதிமுக – பாஜக கூட்டணியை முழுமையாக முறியடித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற அணி அமோகமாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.