விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே விபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையின் உரிமம் ரத்து செய்யப்பட்டது. விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருவோரை அமைச்சர் தங்கம் தென்னரசு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே வடகரையில் உள்ள ராஜசந்திரசேகரன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று (ஜூன் 11) காலை திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில், கல்குறிச்சியை சேர்ந்த சவுடம்மாள் (53), கண்டியனேந்தல் கருப்பையா (35) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் முருகன் (45), பிச்சையம்மாள் (43), கணேசன் (43), மாரியம்மாள் (40) ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
காயடைந்த 4 பேரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டு விருதுநகர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
உரிமம் ரத்து: விபத்து நடந்த பட்டாசு ஆலையின் உரிமம் இன்று உனடியாக ரத்து செய்யப்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக காரியாபட்டி போலீஸார் வழக்குப் பதிந்து பட்டாசு ஆலை மேலாளர் கல்குறிச்சியைச் சேர்ந்த வீரசேகரன் (53), போர்மேன் கனிமுருகன் (23) ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நேரில் ஆறுதல்: அதைத்தொடர்ந்து, விபத்தில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோரை நிதி அமைச்சர் தங்கம்தென்னரசு, மாவட்ட ஆட்சியர் வீ.ப.ஜெயசீலன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர். அப்போது, அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டியில், “பட்டாசு ஆலை விபத்துக்கான உரிய காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கும், காயமடைந்தவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மேற்கொண்டு வருகிறார். காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மேல் சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுவார்கள்.” என்று தெரிவித்தார்.