மதுரை: விருச்சுழி ஆற்றில் கருவேல மரங்களை வெட்டுவதற்கான டெண்டர் விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிவகங்கை ஆட்சியருக்கு மதுரை அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது.
சிவகங்கை திருப்புத்தூரைச் சேர்ந்த சின்னையா உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். இதில், சிவகங்கை மாவட்டம் பொன்னாங்குடி கிராமத்தில் அமைந்துள்ள விருச்சுழி ஆற்றில் முழுவதுமாக சீமை கருவேல மரங்கள் நிறைந்துள்ளன. சுமார் 100 ஏக்கர் பரப்பிலான ஆறு , கண்மாய் முழுவதும் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்துள்ளன.
பொன்னான்குடி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி, திருநாவுக்கரசு ஆகியோர் சட்டவிரோதமாக கருவேல மரங்களை வெட்டி விற்கின்றனர். சுமார் ரூ.30 லட்சம் மதிப்புள்ள கருவேல மரங்கள் இப்பகுதியிலுள்ளள நிலையில் இவற்றை வெட்ட அதிகாரிகளிடம் முறையான அனுமதி பெறவில்லை.
சிவகங்கை ஆட்சியர் தரப்பில் கருவேல மரங்களை வெட்ட டெண்டர் விட்டால் அரசுக்கு வருமானம் வரும். வெள்ளைச்சாமி, திருநாவுக்கரசு இருவரும் இணைந்து தனியார் நிறுவனத்திற்கு ரூ.30 லட்சத்திற்கு கருவேல மரங்களை வெட்ட குத்தகைக்கு விட்டிருப்பதாகவும் தெரிகிறது. பொன்னாங்குடி கிராமம், விருச்சுழி ஆற்றில் நிறைந்துள்ள கருவேல மரங்களை வெட்ட வெளிப்படையான டெண்டர் மூலம் பணி ஒதுக்க உத்தரவிடவேண்டும் என குறிப்பிட்டு இருந்தார்.
இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், மரிய கிளாட் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், ‘முறையாக டெண்டர் நடத்தியே சீமை கருவேல மரங்களை வெட்டும் பணி ஒதுக்கப்பட்டுள்ளது’ என தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், ‘அது போன்ற டெண்டர் எதுவும் நடத்தவில்லை’ என தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள், டெண்டர் நடத்தி சீமைக் கருவேல மரங்களை வெட்ட பணி ஒதுக்கியது குறித்த ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய சிவகங்கை ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை ஒரு வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.