நாமக்கல்: “மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக தலைமையிலான அரசுக்கு முடிவுரை எழுதப்படும்,” என மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சரும், தமிழக பாஜக தலைவருமான எல்.முருகன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
நாமக்கல்லில் இன்று (ஜூன் 11) செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “திமுக என்றால் ஸ்டிக்கர் ஒட்டுவது தான். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை தான் சிங்காரச் சென்னை என கூறுகின்றனர். மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் மாநில அரசு செய்தது போல் காண்பிப்பது தான் திமுகவின் வேலை. வரும் 2026-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் திமுகவை முருக கடவுள் ஓட ஓட விரட்ட போகிறார். தேசிய ஜனநாயக கூட்டணி அமைத்த பிறகு இண்டியா கூட்டணியில் உள்ள கட்சியினருக்கு பெரிய அளவில் பயம் வந்து விட்டது.
தேசிய ஜனநாயக கூட்டணி பலமிக்க வலிமையான கூட்டணியாக உள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் நாள்தோறும் திமுக கூட்டணி கட்சியினர் மாற்றி மாற்றி பேசுகின்றனர். அந்தக் கூட்டணியின் தோல்வி நிச்சயம் செய்யப்பட்டு விட்டது. மதுரையில் வரும் 22-ம் தேதி நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு மூலம் திமுக அரசுக்கு முடிவுரை எழுதப்படும். திமுக கூட்டணியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வெளியே வரலாம்.
திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும். மக்களை பாதுகாக்க வேண்டும். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற யாரெல்லாம் தயாராக இருக்கிறார்களோ அவர்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையலாம். முருக பக்தர்கள் மாநாட்டுக்கு கட்சி பாகுபாடு இல்லை. அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்படடுள்ளது. கூட்டணி கட்சியான அதிமுகவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
திமுகவினர் ஒரு திட்டம் போட்டாலே அதில் என்ன லாபம் என பார்ப்பார்கள். பேருந்து நிலையம் கொண்டு வருவதற்கு முன் திமுகவின் ரியல் எஸ்டேட் புரோக்கர்கள் அதை சுற்றி இடத்தை வாங்கி விடுவர். அதன்பிறகு திட்டத்தை கொண்டு வருவர். நாமக்கல் பேருந்து நிலையத்தை வேறு இடத்துக்கு ஏன் கொண்டு செல்ல வேண்டும். தற்போதுள்ள பேருந்து நிலையத்தை மேம்படுத்தி இருக்கலாம். ஒரு சிலருடைய லாபத்துக்காக பேருந்து நிலையம் மாற்றப்பட்டுள்ளது. கீழடியை பொறுத்தவரை அறிவியல் பூர்வமான ஆதாரங்களை வழங்க வேண்டும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், “கீழடி மட்டுமல்ல, ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வையும் மத்திய அரசுதான் மேற்கொள்கிறது. இறுதி கட்ட முடிவு வருவதற்கு முன் அதற்கு என்னென்ன தேவையோ அது கேட்கப்பட்டுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழக தலைவர் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என உள்துறை அமைச்சர் தெளிவாக கூறியுள்ளார்,” என்றார். இந்த சந்திப்பின்போது, நாமக்கல் பாஜக கிழக்கு, மேற்கு மாவட்ட தலைவர்கள் சரவணன், ராஜேஸ்குமார் உள்பட மாவட்ட நகர, ஒன்றிய நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.