புதுச்சேரி: சாகர் சங்க்ரம் (SAGAR SANGRAM) பாய்மரப் படகு கடல் சாகச பயணத் தொடக்க விழா இன்று நடைபெற்றது. இந்தப் பயணம் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் நடைபெற உள்ள குடியரசு தின விழா அணிவகுப்பையொட்டி, தேசிய மாணவர் படை மாணவர்களுக்கு நடத்தப்படும் போட்டிகளில் ஒன்றாக புதுச்சேரியில் இருந்து காரைக்கால் சென்று மீண்டும் புதுச்சேரி திரும்பும் ‘சாகர் சங்க்ரம்’ பாய்மரப் படகு கடல் சாகச பயணத் தொடக்க விழா தேங்காய்த்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் இன்று நடைபெற்றது.
கடலூர் தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு மற்றும் புதுவை தேசிய மாணவர் கப்பற்படை பிரிவு இணைந்து நடத்தும் இந்த பாய்மரப் படகு கடல் சாகச பயணத்தினை முதல்வர் ரங்கசாமி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ பாஸ்கர், மீனவர் நலத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில் மற்றும் தேசிய மாணவர் படை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து தேசிய மாணவர் படை கப்பற்படை பிரிவைச் சேர்ந்த 25 மாணவியர் உட்பட 60 மாணவ, மாணவியர் இந்த கடல் சாகச பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தக் குழுவினருடனான பயணத்தில் மூன்று கடற்படை அதிகாரிகளும், 2 தேசிய மாணவர் படை இணை அலுவலர்களும் பங்கேற்றுள்ளனர்.
இப்பயணத்தில் மூன்று பாய்மரப் படகுகளில் மாணவர்கள் பயணிக்கின்றனர். இந்த குழுவினர் தாங்கள் செல்லும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் ரத்த தான முகாம் மரம் நடுதல் தூய்மைப் பணி திட்டம் எனப் பல சமூக சேவை சார்ந்த நிகழ்வுகளை நடத்தவுள்ளனர். இந்த கடல் சாகச பயண குழுவினர் 302 கி.மீ.தொலைவை பத்து நாட்களுக்கு கடக்க உள்ளனர்.