நியூயார்க்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் உடனான தொடர்ச்சியான மோதல் போக்குக்கு மத்தியில் பில்லியனர் எலான் மஸ்க், “ட்ரம்ப் குறித்த எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன், அவை மிகைப்படுத்தப்பட்டன.” என்று தெரிவித்திருக்கிறார்.
பில்லியனர் எலான் மஸ்க், கடந்த வாரம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்-க்கு எதிராக வெளியிட்ட தனது சில பதிவுகளுக்காக வருத்தம் தெரிவித்தார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கடந்த வாரம் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பற்றிய எனது சில பதிவுகளுக்கு நான் வருந்துகிறேன். அவை மிகைப்படுத்தப்பட்டன” என்று எலான் மஸ்க் குறிப்பிட்டுள்ளார்.
பின்னணி என்ன? – அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு ட்ரம்ப் போட்டியிட்டதில் இருந்தே அவரது தீவிர ஆதரவாளராக இருந்தவர் தொழிலதிபர் எலான் மஸ்க். ட்ரம்ப் மீண்டும் அதிபர் ஆனதும், அமெரிக்க அரசின் செலவினங்களை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட துறையை எலான் மஸ்க் கவனித்தார்.
இந்நிலையில், அமெரிக்க அரசின் பட்ஜெட் தயாரானது. இதில் எலான் மஸ்க் தலைமையிலான குழு பரிந்துரைந்த விஷயங்கள் இடம் பெறவில்லை. ஏராளமான வரிச்சலுகைகள், அமெரிக்க ராணுவ செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு, மின்சார வாகனங்களுக்கான 7,500 டாலர் மானியம் ரத்து போன்ற அம்சங்களால், எலான் மஸ்க் ஏமாற்றம் அடைந்தார். இதனால் அவர் ட்ரம்ப் நிர்வாகத்தில் இருந்து விலகும் அறிவிப்பை வெளியிட்டார். அதிபர் ட்ரம்ப்பின் பட்ஜெட் குறித்தும் விமர்சித்தார்.
இதற்கு சமூக ஊடகத்தில் பதில் அளித்த அதிபர் ட்ரம்ப், “மின்சார வாகனங்களுக்கான மானியம் பட்ஜெட்டில் ரத்து செய்வதால், எலான் மஸ்க் கோபம் அடைந்துள்ளார். பட்ஜெட்டில் பல லட்சம் பணத்தை சேமிப்பதற்கான ஒரே வழி எலான் மஸ்க் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்களையும், அமெரிக்க அரசு செய்துள்ள ஒப்பந்தங்களையும் நிறுத்துவதுதான்.” என எலான் மஸ்க்குக்கு மிரட்டல் விடுத்தார். இந்த வார்த்தை மோதல் நீண்டு கொண்டே செல்கிறது.
வெள்ளை மாளிகையில் சுதந்திரமாக திரிந்த தொழிலதிபர் எலான் மஸ்க்குக்கு, அதிபர் ட்ரம்ப்புடன் இந்தளவு கருத்து வேறுபாடு ஏற்படும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இருவர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 150 மடங்கு லாபத்தில் விற்ற, எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள் ஒரே நாளில் 14 சதவீதம் வீழ்ந்தது. இதனால் முதலீட்டாளர்களுக்கு சுமார் ரூ.1 லட்சத்து 28 ஆயிரத்து 621 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ட்ரம்ப் அமெரிக்க ஊடக நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மஸ்க் உடனான நட்புறவு முற்று பெற்று விட்டதாக நினைக்கிறேன். அதிபர் தேர்தலில் நான் மிகப்பெரிய வெற்றியை பெற்றேன். ஆனால், அதற்கு முன்பாகவே அவருக்கு நிறைய சலுகைகள் அளித்தேன். நான் முதல் முறை அதிபராக ஆட்சி பொறுப்பில் இருந்த போதும் இதை செய்தேன். அவரது உயிரை காத்தேன். அவருடன் மீண்டும் பேசும் எண்ணம் எனக்கு இல்லை.
2026-ல் நடைபெறும் இடைத்தேர்தலில் அவர், ஜனநாயக கட்சி உறுப்பினர்களுக்கு ஆதரவு அளித்தால் நிச்சயம் அதற்கான பின்விளைவுகளை எதிர்கொள்வார்” என ட்ரம்ப் கூறியுள்ளார்.