மதுரை: மதுரை கூடலழகர் கோயிலில் செவ்வாய்க்கிழமை வைகாசி திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வடம்பிடித்தனர்.
மதுரை கூடலழகர் கோயிலில் வைகாசி பெருந்திருவிழா ஜூன் 2-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சுவாமி புறப்பாடு நடந்தது. இதில் பல்வேறு வாகனங்களில் வியூக சுந்தரராஜபெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியருடன் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து 9-ம் நாளான இன்று (ஜூன் 10) தேரோட்டத்தை முன்னிட்டு அதிகாலை 5.30 மணியளவில் வியூக சுந்தரரராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியருடன் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து காலை 6.15 மணியளவில் பக்தர்கள் தேரின் வடங்களை பிடித்து இழுக்கத் தேரோட்டம் தொடங்கியது.
பக்தர்களின் கோவிந்தா, கோவிந்தா கோஷங்கள் முழங்க தேரை வடம் பிடித்து இழுத்தனர். இதில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக வடம்பிடித்து இழுத்தனர். பாண்டிய வேளாளர் தெரு, தெற்கு மாரட் வீதி, திருப்பரங்குன்றம் சாலை, நேதாஜி ரோடு, மேலமாசி வீதி வழியாக வலம் வந்து காலை 8.30 மணிக்கு நிலையை அடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். இரவில் தங்கச்சிவிகையில் புறப்பாடாகினர். நாளை (ஜூன் 11) மாலை எடுப்புச் சப்பரம், சப்தாவர்ணத்தில் எழுந்தருள்கின்றனர்.
நாளை மறுநாள் (ஜூன் 12) காலை 10.15 மணியளவில் ராமராயர் மண்டபத்திலிருந்து குதிரை வாகனத்தில் புறப்படுகிறார். பனகல் சாலை வழியாக தெற்காவணி மூல வீதியிலுள்ள கன்னிகா பரமேஸ்வரி சத்திரத்தில் எழுந்தருள்கிறார். மாலை 4 மணியளவில் திருமஞ்சனமாகி குதிரை வாகனத்தில் கோயிலுக்கு புறப்படுகிறார். 14-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெறும். அடுத்த நாள் 15-ம் தேதி உற்சவ சாந்தி அலங்காரத் திருமஞ்சனத்துடன் திருவிழா நிறைவுபெறும். விழா ஏற்பாடுகளை கோயில் தக்கார் ந.யக்ஞ நாராயணன், உதவி ஆணையர் பிரதீபா தலைமையில் கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.