திருமலை: ஜேஷ்டாபிஷேகத்தை முன்னிட்டு திருமலையில் நேற்று வைர கவச அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பர் மாடவீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருமலையில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் ஜேஷ்டாபிஷேகம் நடத்துவது வழக்கம். உற்சவ மூர்த்திகளின் சிலைகளில் ஏதாவது தேய்மானம் இருந்தால் அதனை சரிசெய்யும் விதமாக இந்த 3 நாட்கள் ஜேஷ்டாபிஷேக விழாவை கடந்த 1990-ம் ஆண்டு முதல் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது.
இதையொட்டி, கோயிலில் உள்ள சம்பங்கி மண்டபத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு நேற்று சிறப்பு பூஜைகள் நடந்தன. இதயடுத்து சிறப்பு திருமஞ்சன சேவையும் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து உற்சவ மூர்த்திகளுக்கு ஆண்டுக்கு ஒரே ஒருமுறை அணிவிக்கப்படும் வைர கவச அலங்காரம் செய்யப்பட்டு, கோயிலுக்கு வெளியே சகஸ்ர தீப அலங்கார சேவையில் உற்சவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
ஜேஷ்டாபிஷேகத்தில் இன்று முத்து அங்கி அலங்காரத்திலும் நாளை தங்க கவச அலங்காரத்திலும் உற்சவர்கள் காட்சியளிப்பர். அடுத்த ஜேஷ்டாபிஷேகம் வரை தங்க கவச அலங்காரத்திலேயே உற்சவர் மலையப்பர் அருள் பாலிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.