சென்னை: ‘தி இந்து பதிப்பக குழுமம்’ சார்பில், காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் வாழ்க்கை சரித்திரத்தை விளக்கும் உண்மையின் அவதாரம் – காஞ்சி மகாஸ்வாமி தமிழ் நூலின் 2 தொகுதிகளை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஜூன் 10-ம் தேதி (இன்று) திருப்பதியில் வெளியிடுகிறார்.
அனைவராலும் போற்றத் தக்க மதத் தலைவராக இருந்த ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் மாரத்தான் யாத்திரைகளின்போது அவரது செயல்பாடுகள், திட்டங்கள், அவரது முகாம்களில் நடைபெற்ற நிகழ்வுகள், சொற்பொழிவுகள், பல்வேறு இடங்களில் அவருக்கு கிடைத்த வரவேற்பு குறித்து ‘தி இந்து’ பத்திரிகையில் வெளியிடப்பட்ட செய்திகளைத் தொகுத்து ‘தி இந்து பதிப்பக குழுமம்’ சார்பில் ‘உண்மையின் அவதாரம்’ -காஞ்சி மகாஸ்வாமி என்ற நூல். 2 தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த நூலை காஞ்சி சங்கர மடத்தின் 70-வது பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள். திருப்பதியில் ஜூன் 10-ம் தேதி (இன்று) வெளியிடுகிறார்.
நூலின் முதல் தொகுதி. மகாஸ்வாமி காஞ்சி காமகோடி பீடத்தின் 68-வது பீடாதிபதியாக பட்டமேற்றது முதல் விஜய யாத்திரை சம்பவங்களை விவரிக்கிறது. இரண்டாம் தொகுதி, மகாஸ்வாமி மேற்கொண்ட வியக்கத்தக்க நடைபயணம் (மாரத்தான்), 1985-ல் காஞ்சிபுரம் திரும்பியது, சித்தி அடைந்தது தொடர்பான செய்திகளை விவரிக்கிறது. மேலும், தனது பரமகுரு மகாஸ்வாமி குறித்து ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவுகூரும் சம்பவங்களும், புதிய பீடாதிபதி ஸ்ரீ சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின் பீடாரோஹண நிகழ்வு செய்திகளும் இரண்டாவது தொகுதியில் இணைக்கப்பட்டுள்ளன. (இந்நூலைப் பெறுவதற்கு publications.thehindugroup.com/bookstore/என்ற லிங்கை தொடர்பு கொள்ளலாம்)
சுவாமிகளின் அனுக்கிரஹ பாஷணங்களைத் தொகுத்து ‘தெய்வத்தின் குரல்’ என்று ஏழு பாகங்களாக அமைத்து சாமானியர்களும் புரிந்து கொள்ளும் வகையில் செய்த பெருமை ரா.கணபதியைச் சாரும். அதன் தொடர்ச்சியாக 8-வது பாகம் தற்போது வெளியாக உள்ளது. இந்நூலுடன் மைத்ரீ, தினசரி பெரியவா தியானம், காஞ்சி முனிவர் நினைவுக் கதம்பம், பாரதிய சமுதாயக் கட்டமைப்பின் ஆணிவேர், நந்தவனத்தில் ஓர் ஆண்டி ஆகிய நூல்களையும் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வெளியிட உள்ளார். (இந்நூல்களைப் பெறுவதற்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி என் 7550113408 – வேத ப்ரகாசனம் நிறுவனர் வேதா டி.ஸ்ரீதரன்).